பக்கம் எண் :

களவியல் சூ. 11 91

நிமித்தமாகத் தலைமகன் இரத்தலுங் குறையுறுதலும் மடலேறுவல் எனக் கூறுதலும் பெறுமென்றவாறு.

ஈண்டு, குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் என்றது-தோழி கூற்றுள் அருமையினகற்சி யென்று ஓதப்பட்டது. தண்டாதுரைத்தலாவது-தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல். மற்றையவழி என்பது- பின்வரவென்றல் முதலாயின. சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகை என்பது-முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துணர்த்தலென ஓதப்பட்டது. அறிந் தோளயர்ப் பென்பது-பேதைமை யூட்டல் என ஓதப்பட்டது. கேடு கூறுதலாவது-உலகுரைத் தொழிப்பினும் என ஓதப்பட்டது. பீடு கூறுதலாவது-பெருமையிற் பெயர்ப்பினும் என ஓதப்பட்டது. நீக்கலினாகிய நிலைமை என்பது-அஞ்சி அச்சுறுத்தலென ஓதப்பட்டது. இவையெல்லாந் தோழி கூற்றினுட் காணப்படும்.

தோழியைக் குறையுறும் பகுதி வருமாறு:

“தோளும் கூந்தலும் பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன எற்கண்டு
நயந்துநீ நல்காக் காலே1      (ஐங்குறு-178)

இனி மடலேறுதல் என்பதற்கு செய்யுள்:

“மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுங் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங் காழ் கொளினே” 2.      (ஐங்குறு-17)


1. பொருள்: தோழீ! தொண்டி போலும் வளமும் அழகும் கொண்ட என்னுடைய இரந்து குறையுற்று வருந்தும் நிலை கண்டும் நீ இரங்கி இவளை என்னுடன் சேர்த்து வையாத போது யான் இவள் தோளையும் கூந்தலையும் பலவாகப் பாராட்டி இல்வாழ்க்கையை மேற்கொள்ளுதல் கூடுமோ?

2. பொருள்: காமம் உறுதிப்பட்டு மிகுமானால் அது கொண்டோர் குதிரையென்று பனைமடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊர்ப்பூ என்று எருக்கம் பூமாலை சூடுப. ஊர்த் தெருவில் பலராலும் ஆர்ப்பாட்டம் செய்யவும் பெறுப. பிறிதும் ஆகுப.