அவ்வழித் தலைமகன் கூறிய சொற்கேட்டு, இஃது அறிவும் அருளும் நாணமும் உடையார் செய்யார் எனக் கூறிய வழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள், “நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்1 (குறள்-1133) எனவும், “அறிகிலா ரெல்லாரும் என்றேயென் காமம் மறுகில் மறுகும் மருண்டு”2 (குறள்-1139) எனவும் வரும். பிறவுமன்ன. மடல்மா கூறாது பிற கூறியதற்குச் செய்யுள்: “பணைத் தோட் குறுமகள் பாவைதைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போம் அறிதலும் அறியார் முறையுடை அரசன் செங்கோல் வையத்து யான் தற் கடவின் யாங்காவது கொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேயிவ் அழுங்கல் ஊரே”. 3 (குறுந்-276) இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் கைக்கிளை பெருந்திணைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாமாறு வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.
1. பொருள்: நாணமும் ஆண்மையும் இவளைக் காணு முன்னெல்லாம் உடையனாயிருந்தேன். இன்று காமுற்றார் காமுற்றவற்றைப் பெறாதுவிடின் ஏறும் மடலை யான் உடையேனாயினேன். 2. பொருள்: என் காமம் வெளிப்படாதிருந்ததால் யாரும் அறியவில்லை என்று நினைத்து அது தெருவில் பரவி மயங்கிச் சுழல்வதாகின்றது. 3. பொருள்: யான் மூங்கில் போலும் தோளுடைய குறுமகள் போல் பாவை எழுதியதையும், அதற்காகப் பஞ்சாய்க்கோரையைத் தேடிச் சென்றதையும் பாவையின் முலையில் தொய்யில் எழுதியதையும் அவளைக் காத்திருக்கும் இவ்வூரார் அறியார். யான் அரசவையில் கூறி அவளைத் தர வேண்டுவனாயின் இவ்வூர் என்னாகும். பெரிதும் பேதைமையுடையது இவ்வூர்: பாவம் இவ்வூர். |