பக்கம் எண் :

களவியல் சூ. 11 93

நச்.

இது, மேல் இயற்கைப் புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன்வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கற் கூட்டமும் அவற்றுவழித் தோன்றுந் தோழியிற் கூட்டமும் நிகழுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்து மாறும் ஆற்றாமை கையிகந்து கலங்கிய வழி அவன் மடன்மா கூறுமாறுங் கூறுகின்றது. இதனுள் ‘இருநான்கு கிளவியும்’ என்னுந் துணையும் இடந்தலைப்பாடும் ‘வாயில் பெட்பினும், என்னுந் துணையும் பாங்கற் கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம்.

(இ-ள்) : மெய்தொட்டுப் பயிறல்-தலைவன் தலைவியை மெய்யைத் தீண்டிப் பயிலா நிற்கும் நிலைமை என்றால், இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ப் பெருநாணினளாகிய தலைமகள் எதிர் நிற்குமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின் ‘மறையிற்றப்பா மறையோனொருவனை மறையிற் றப்பிய மறையோன்’ போலவும் ‘வேட்கை மிகுதியான் வெய்துண்டு புண்கூர்ந்தார்.” போலவும்1 நெஞ்சும் நிறையுந் தடுமாறி இனிச் செயற்பாலதியாதென்றும் ஆயத்துள்ளே வருவான் கொல் என்னும் அச்சங் கூறவும்2 வாரான் கொல் என்னுங் காதல் கூரவும்2, புலையன்றீம்பால் போன் மனங் கொள்ளா அனந்தருள்ளம்3 உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும்; சென்றும் நின்றாளைத் தலைவன் இவ்வொழுக்கம் புறத்தார் இகழப் புலனாய் வேறு பட்டாள் கொல்லோ எனவும் அங்ஙனம் மறைபுலப்படுதலின் இதனினூங்கு வரைந்து கொள்ளினன்றி இம்மறைக்கு உடம்படாளோ வெனவுங் கருதுமாறு முன்புபோல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பறியு மென்றற்குத் தொடு மென்னாது ‘பயிறல்’ என்றார்.


1. மறையிற்றப்பா...........புண்கூர்ந்தார் போலவும் மறைவழி யொழுகுதல் தவறாத ஒருவனிடம் மறைவழியிற்றவறியவன் உள்ளுக்குள்ளே கலக்கமுடையவனாகத் தோன்றுதல் போல மனக் கலக்கமும், சூடானதையுண்டு வாயிற் புண் உற்றார் துடித்துப்பின் அது நீக்கும் வழியை ஆய்தல் போலவும்.

2. காதல் கூர்தல்-வந்தால் கண்டு மகிழலாமே எனும் அன்பு மிகுதல்.

3. அனந்தர் உள்ளம்-மயக்கவுள்ளம்.