பொய் பாராட்டல்-அங்ஙனந்தீண்டி நின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் நுதலும் நீவிப் பொய் செய்யா நின்று1 புனைந்துரைத்தல். சிதைவின்றேனுஞ் சிதைந்தன போல் திருத்தலிற் ‘பொய்’ என்றார். இடம் பெற்றுத் தழாஅல்-அவ்விரண்டனானுந் தலைவியை முகம் பெற்றவன் அவணோக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக் கொண்டு கூறல். இடையூறு கிளத்தல்-அவள் பெருநாணினளாதலின் இங்ஙனங் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகச் சில நிகழ்த்தியவற்றைத் தலைவன் கூறல். அவை கண் புதைத்தலுங் கொம்பானுங் கொடியானுஞ் சார்தலுமாம். நீடுநினைந்திரங்கல்-புணர்ச்சி நிகழாது பொழுது நீண்டதற்கு இரங்கி இரக்கந் தோன்றக் கூறல். கூடுதல் உறுதல் - நீடித்ததென்று இரங்கினானென்பது அறிந்தோள் இவன் ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெரு நாணுக் கடிது நீங்குதல். சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி-தலைவன் தான் முற்கூறிய நுகர்ச்சியை விரையப் பெற்றவழி; பெற்றவழி என்பதனைப் பெறுதலெனப் பெயர்ப்படுத்தல் அக்கருத்தாற் பெறுதும்.2 தீராத் தேற்றம்3 உளப்படத் தொகைஇ-எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்து,
1. பொய் செய்யா நிற்றலாவது கூந்தல் ஒப்பனை குலையா திருக்கவும் குலைந்ததாகத் திருத்துதலும் நுதல் வியர்வை கொள்ளாதிருக்கவும் கொண்டதாகத் துடைத்தலும் போல்வன செய்து நிற்றல். 2. பெற்றுழி என்பது பெற்றால் என எச்சப் பொருளாகவோ பெறுதற்கண் என ஏழாம் வேற்றுமைப் பொருளாகவோ வரும். அது இங்குப் பெறுதல் என்னும் தொழிற் பெயர்ப் பொருளில் ஆளப்பட்டுள்ளது. பயிறல் நாட்டல் முதலியன தொழிற் பெயர்களாகவுள்ளன. அவற்றொடு சேர்த்துக் கூறும் பெற்றுழி என்பதும் தொழிற் பெயராகவே ஆகும். அக் கருத்தால் என்றது முன்னர்த் தொழிற் பெயர்களைக் கூறிய கருத்தால் என்பதாம். 3. தீராத் தேற்றம்-விட்டுப் பிரியாமைக்குக் கூறும் தெளிவுரை. அதாவது சூளுரை. |