புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாதென்றற்கு ‘வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்’ என்றார், முன் தெளிவகப்படுத்த பின் நிகழ்ந்த ஆற்றாமை தீர்தற்குத் தெய்வத்தொடு சார்த்திச் சூளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று. பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்-குறையாச் சிறப் பினவாகிய இவ்வெட்டும். தாமேகூடும் இடந்தலைப்பாடும், பாங்கனாற்குறிதலைப்பெய்யும் இடந்தலைப்பாடும் ஒத்த சிறப் பினவாதற்குப் “பேராச்சிறப்பின்” என்றார். எனவே இடந்தலைப்பாடு இரண்டாயிற்று தோழியிற் கூட்டம் போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையிற் பாங்கற் கூட்டம் என்பதனைத்தலைமகன் பாங்கனைக் கூடுங் கூட்டமென்று கொள்க. உதாரணம் “உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்” (குறள்-1106) இஃது என் கை சென்றுறுந்தோறும் இன்னுயிர் தளிர்க்கும் படியான் தீண்டப்படுதலின் எனப் பொருள் கூறவே மெய் தீண்டலாயிற்று. “தீண்டலுமியைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடுபெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடமானேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலை நிறத்தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண்டன்னவுண்க ணாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே”1 (குறுந்-272) கழறிய பாங்கற்குக் கூறுந் தலைவன், இவனான் இக் குறை முடியாது, நெருநல் இடந்தலைப் பாட்டிற் கூடியாங்குக் கூடுவல், அது கூடுங்கொல் என்று கூறுவான் அற்றைஞான்று மெய் தொட்டுப் பயின்றதே கூறினான். “சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் திருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்
1. கருத்து: பக்கம் 79ல் காண்க. |