பக்கம் எண் :

96தொல்காப்பியம்-உரைவளம்

காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ
கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புகர்முக வேழத்தின்
றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ வல்ல நண்ணா
ராண்டலை மதிலராகவு முரசுகொண்
டோம்பரண் கடந்தவடு போர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடலன்னநின்
கரும்புடைத் தோளுமுடைய வாலணங்கே1      (நற்றிணை-39)

இஃது, அங்ஙனம் மெய்தீண்டி நின்றவன் யான்தழீஇக் கொண்டு கூறின் அதனை ஏற்றுக் கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென, இடையூறு கிளத்தல் கூறிக், ‘காமங்கைம்மிகிற்றாங்குத லெளிதோ’ வென ‘நீடு நினைத்திரங்கல்’ கூறிப், புலியிடைத்தோய்ந்து சிவந்தகோடு போல என்னிடைத் தோய்ந்து காமக் குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று. இனித் தனியே வந்தன.

“கடல்புக்குயிர் கொன்று வாழ்வர் நின்னைய
ருடல்புக்குயிர் கொன்று வாழ்வை மன்னீயு
மிடல்புக்கடங்காத வெம்முலையோபார
மிடர்புக்கிடுகு மிடையிழவல் கண்டாய்2       (சிலப் கானல்-17)

இது பொய் பாராட்டல்


1. கருத்து: நங்கையே! யான் நின்னைத் தழுவிச் சில கூறின் அவற்றை ஏலாது முகம் தாழ்ந்து கண் புதைத்து நாணுகின்றாய். காமமானது கைகடந்து மிகுமாயின் தாங்குதல் எளிதோ? புலியைக்குத்திய வேழத்தின் மருப்பின் நுனி குருதியால் சிவந்து காணப்படுதல் போல கடைமணி சிவந்த நின் கண்கள் மட்டுமா என்னைச் சினவா நிற்கின்றன? பாண்டியனின் மதுரை போலும் தொய்யில் எழுதப் பெற்ற நின்தோள்களும் அல்லவா வருத்துகின்றன.

2. கருத்து: நின் தமையன்மார் கடலிற் புகுந்து வலைவீசி அங்குள்ள உயிர்களைக் கொன்று விற்று வாழ்வர். நீயும் என் உடலில் புகுந்து என் உயிரைக் கொன்று வாழ்வாய். நின் விரும்பத்தக்க முலையோ மிக்க பாரமுடையதாகும். அதனால் துன்புற்றுச் சிறுகும் இடை. அதனை இழந்து விடாதே.