பக்கம் எண் :

களவியல் சூ. 11 97

“கொல்யானை வெண்மருப்புங் கோள்வல் புலியதளு
நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு-செல்வார்தா
மோரம்பினா னெய்து போக்குவர்யான் போகாமை
யீரம்பி னாலெய்தா யின்று1       (தினைமாலை-22)

இஃது இடம் பெற்றுத் தழாஅல்.

“இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே
புலம்புகொண் மாலை மறைய
நலங்கே ழாக நல்குவ ளெனக்கே”2      (ஐங்குறு-197)

இது கூடுதலுறுதல்

“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்”      (குறள்-1105)

இது நுகர்ச்சி பெற்றது.

“எம் மணங்கினவே மகிழ்ந முன்றி
னனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
வெக்கர் நண்ணிய வெம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரா மகளிரொ டுற்ற சூளே”3      (குறுந்-53)

இதனுள் “தீராத் தேற்ற” த்தைப் பின்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க.


1. கருத்து: பக்கம் 80ல் காண்க.

2. கருத்து: விளங்கும் வளையொலிக்கத் தன் காலால் நண்டுகளை ஆட்டி முகத்தை மறைக்கும் கூந்தல் உடையளாய்த் தலை தாழ்ந்து நின்றாள். அவள் தனிமை கொள்ளக் காரணமாம் மாலைப் பொழுது மறையப் பின்னர்த் தன் நலமிக்க மார்பினை யான் முயங்கத் தரும்.

3. கருத்து: மகிழ்ந! எம் மூரில் உள்ள நீர்த்துறையில் அன்று நீ எனது முன்கையைப் பற்றி இனிப் பிரியேன்; பிரியின் தரியேன் எனச் சூரர மகளிர்மேல் வைத்துச் சூளுறவு செய்தது எம்மை இப்போது வருத்தியது.