அணியணிந்து விடுத்தலும் இவை போல்வன பிறவும் இடந் தலைப்பாட்டிற்குக் கொள்க. (உ-ம்). “வெள்ள வரம்பி னூழி போகியுங் கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை யிரும்பல் கூந்தற் கொடிச்சி பெருந்தோட் காவல் காட்டியவ்வே”1 (ஐங்குறு-281) இது கிள்ளை வாழ்த்து, “நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள்2 (குறள்-1104) இது நீங்கியவழிப் பிறந்த வருத்தங் கூறியது. “அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்லி வடந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வய லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் றொண்டி தன்திறம் பெறுகவிவ ளீன்ற தாயே”3 (நற்றிணை-8)
1. கருத்து: கரிய கூந்தலுடைய கொடிச்சியானவள் தன் தோள்களால் இத்தினைப்புனங் காவலை மேற்கொண்டாள் என்பதைக் கிளிகள் காட்டின ஆகலின் அவை வெள்ளம் என்பதை வரம்பாகவுடைய ஊழிக்காலம் முடிந்தாலும் தாம் முடியாமல் வாழ்வனவாகுக. 2. கருத்து: நீங்கினால் சுடுவதும் குறுகினால் குளிர்வதும் ஆகிய நெருப்பை எங்குப் பெற்றாள் இவள்? 3. கருத்து: எம்மைத் துயரப் படுத்தினாள் இவள் யார் மகளோ! அரிவார் அரிந்து போகவும் மலர் பறித்துத் தருவார் பறித்துப் போகவும் குறையாமல் சேற்றில் தாவிய தாளுடைய நெய்தலானது போர் போலப் பூக்கும் படியான பொறையன் என்பானது தொண்டி என்னும் நகரின் வளமெல்லாம் இவளையீன்ற தாயானவள் பெறுவாளாக. |