பக்கம் எண் :

10மெய்ப்பாட்டியல்

அஃது 1உலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லியதிலனென்பது. ஒழிந்த எட்டும் 2உலகியலாகலிற் கூறினான், ‘வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்’ (பாயிரம்) என்று புகுந்தமையினென்பது. அவை எட்டுமாமாறு இனிக் 3கூறும்.

(3)

[பொருள்பற்றி நகைச்சுவை இத்துணைய எனல்]

252.எள்ள லிளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப.

இது, நிறுத்தமுறையானே நகைக்குறிப்பு நான்கென்ப துணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனுமெனக் கருதப்பட்ட நகை நான்கு என்றவாறு.

4இவை நான்கும் பொருளாகிச் 5சத்துவமுங், குறிப்பும், சுவையும் என்னும் மூன்றற்கும் முதற்கண்ணவாகலான் மூன்றனையும் 6அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறுகின்றவாறு இதுவென்பது. இவை நான்கும் ஒன்றிரண்டாகி எட்டாதலும் உடைய.

எள்ளலென்பது, தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நகுதலுமென இரண்டாம். இளமையென்பது, தான் இளமையாற் பிறரை நகுதலும் பிறரிளமை கண்டு தான் நகுதலுமென இரண்டு. 7பேதைமையென்பது,


1. உலகியல் நீங்கினார் -- துறந்தோர்.

2. உலகியல் -- உலகவழக்கு.

3. கூறும் -- கூறுவான். என்றது ஆசிரியனை.

4. இவை நான்கென்றது எள்ளன் முதலிய நான்கை. பொருள் -- சுவை பிறத்தற்குக் காரணமாகிய பொருள்.

5. இவை சுவையும் குறிப்பும் சத்துவமும் என்று மாறியிருப்பது நலம். தலைதடுமாற்றமென்னும் உத்தியாற் கூறினாரெனினுமாம். சுவைக்கு முதற்கண்ணது பொருளாதலின்.

6. அடக்கல் -- பொருளுளடக்கல்.

7. இளம்பூரணர். பேதைமை என்பதற்கும் மடமை என்பதற்கும் வேறுபாடென்னையெனின், பேதைமை என்பது உய்த்துணர்ந்து திரியக்கோடல்; மடமை என்பது பொருண்மை யறியாது திரியக்கோடல் என்பர்.