பக்கம் எண் :

பொருளதிகாரம்11

அறிவின்மை. மடமையென்பது பெரும்பான்மையுங் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. இவையுந் தன் பேதைமையா னகுதலும் பிறன் பேதைமையா னகுதலும், தன் மடமையான் நகுதலும் பிறன் மடமையான் நகுதலுமென இவ்விரண்டாம்.

எள்ளலென்பது இகழ்ச்சி.

1”எள்ளி நகினும் வரூஉம்”

(கலி-61)

என்பது, தன்கண் நிகழ்ந்த எள்ளல்பொருளாக நகை பிறந்தது.

2”நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே.”

(அகம்-248)

என்பது, பிறரெள்ளியது பொருளாகத் தன்கண் நகைபிறந்தது; என்னை? தன் மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்கவாறு. இது வெகுளிப்பொருளாக நக்கதன்றோவெனின், அது வீரர்க்கே உரித்தாகல் வேண்டும். இவள் அவளை வெகுண்டு தண்டஞ்செய்வாளல்லள் அதற்கே உவப்பினல்லதென்பது. அல்லதூஉம்,

3”நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்.”

(புற-72)

என்றாற்போல வீரத்தெழுந்த வெகுளிநகையும் எள்ளல்நகை யென்றே அடக்கவேண்டும் ஈண்டென்பது.

4”நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே.”

(கலி-13)

என்புழித், தன் இளமை பொருளாக நகைபிறந்தது.


1. எள்ளி நகினும் வரூஉம் என்பது தலைவிக்குக் குறை நயப்பித்த தோழி கூற்று. தலைவியே! அவன் குறையுற்று நிற்கின்ற காலத்து யான் இகழ்ந்து சிரித்தாலும் அவன் பலகாலும் வருவான் என்பது கருத்து. தன்கண் நிகழ்ந்த எள்ளல் பொருளாகத் தோழிக்கு நகை பிறந்தது.

2. தன் மகளை நோக்கி நீ மிகவும் நல்லை எனச் சிரித்துச் சென்றாள் என்றது. செவிலித் தாய் தன் மகள் தன்னை மதியாமை குறித்துச் சிரித்துச் சென்றாள் என்றபடி.

3. நகுதக்கனர் -- சிரிக்கத்தக்கார். இவனது நாட்டை உயர்த்திச் சொல்வார் எம்மாற் சிரிக்கத்தக்கார் என்றமையின் வெகுளிபற்றிய நகையாயிற்று, இது எள்ளல் நகையுள் அடங்காது என்பது பேராசிரியர் கருத்து.

4. நடுங்குதல் காண்மார் நகை குறித்தனர்--தலைவியே உனது மெய்ந்நடுக்கத்தைக் காண்டற்கு ஒரு விளையாட்டைக் குறித்துச்சொன்னார். இது தலைவன் இளமைபொருளாக அவற்கு நகை பிறந்தது.