பாராட்டிய பருவமுமுள. இப்பொழுது புதல்வனைத் தடுத்த பாலொடு சாய்ந்து தேமலையணிந்த இனிய மென்முலைகளை அகலம் பொலிய முயங்கலை யாம் வேண்டினேம். தாம் தீம்பால் படுதலை அஞ்சினர். பருவம் என்றது களவுக்காலத்தைக் குறித்ததென்பர் பேராசிரியர். 272-ஞ் சூத்திர உரையுள் மறைந்தவையுரைத்தல் என்பதனுரை நோக்குக. (அகம். 26) 13. குறுமகளைக் கொண்டனை என்ப. அது, களிற்றைப் பிடித்த காலத்துப் பேரொலிபோலப் பலர்வாய்ப்பட்டு அலராகின்றது. (அகம். 96) 273-ம் சூத்திரம் 1. இவளேயன்றி, அவன்றானும் தினைப்புனத்திலிட்ட பரணிடத்து எரிந்த அகிலின் புகையாலுண்ணப்பட்டு ஒளிமழுங்கித் திரியும் மதியம் வானிடத்தே சென்று அம்மலைத் தலையிலே தங்கிற்றாயின் அதனை அந்த மலையிலே வைத்த தேனினது இறாலென்று கருதி அதனை அழித்தற்குக் கண்ணேணி முதலியன சமைத்திருக்கும் காடு அகன்ற நாட்டையுடையவன் மகன். (கலி. 39) 2. யான் நினைத்த வினையை முடித்தாலொத்த இன்பத்தைத் தருவோள் மனையின்கண் மாட்சிமைப்பட்ட தீபத்தை ஏற்றி அதனொடு வருந்துகின்ற மாலைப்பொழுது என்று. (நற். 3) 3. தஞ் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர்களுண்ணவும் சுற்றமல்லாத சுற்றத்தாரை (என்றது நண்பர்களை) நண்புசெய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தோடு விரும்பி. (அகம். 93) 4. நீ விரும்பித் தலைவி தோளிலெழுதிய தொய்யில் தருகின்ற அழகினையும் இவள் மார்பில் நின்னை வலியாகவுடைய சுணங்கின் அழகையும் கைவிடல் ஒல்லுமாயின் நினைத்துப்பார். (கலி. 18) 5. அது கேட்டவன் நீ இங்ஙனம் இகழ்ந்து கூறுதலால் நின்னோடு ஒன்றுங் கூறேன்; முல்லையினது முகையையும் பீலி முருந்தையும் நிரைத்தாலொத்த பல்லும் பணைபோலுந் தோளும் பெரிய அமர்செய்யும் உண்கண்ணும் யான் நல்லேனென்று நின்னுடைய தகுதியைப் பிறர் நச்சுதலின்றி நீதானே நச்சியிருக்கின்ற சொல்லையுடையவளே! நின்னொடு மறுமாற்றஞ் சொல்லுதலை யார் நிகழ்த்துவாரென்றான். (கலி. 108) 6. நின் மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப்பட நோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல்நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து (மாலைக் |