5. வேம்பின் அரும்பையொத்த நீண்ட கண்களையுடைய நீர்வாழ் ஞெண்டு இரையைத் தேடுகின்ற வெள்ளிய குருகுக்கஞ்சி அயலிலுள்ளதாகிய தழைத்த பகன்றையையுடைய அரிய அள்ளலாகிய சேற்று நிலத்தின்கண் தேமலைப்போல வரிபொருந்த ஓடி விரைந்து தன்னுடைய நீர்மலிந்த மண்ணிற் கிண்டிய புற்றின்கண் அடங்கியிருக்கு மூரனே! (அகம். 176) 6. அகப்பட்ட பரத்தையரது நெஞ்சு வலிதென்றறியாது பாகனைத் தேரொடும் போகவிட்டு அவள் உன்னை விருந்தாக எதிர்கொள்ள அவள் வரவினைக் கருதிநின்ற நீ. (கலி. 69) 7. குளிரான மாரிக்காலத்தேயாயினும் தென்றற்காற்று வீசின் உடம்பிற்கினிதாகும். (அதுபோல) தோழீஇ! ஊடியிருப்பினும் ஊரனுடைய நல்ல மேனியைக் கூடுதல் எமக்கு இன்பமாகும். (ஐங். 32) 8. அயிரைமீன் பரந்த அழகிய வயலிடத்தே தாங்குகின்ற அழகுமலர்ந்த உட்டுளையமைந்த திரண்ட தண்டையுடைய ஆம்பற்பூவைப் பறிப்போர் புனல் வேட்கையை அடைந்தாற்போல இவள் முலையிடைக் கிடந்தும் நடுங்கலுறுகின்றீராயினீர். தொழுதுகாணும் மூன்றாம் பிறைபோல யாமுமக்கு அரியேமாகித் தோன்றிய களவுக்காலத்து மிகவும் பொறுத்தீர் இதற்கு நோவேன்யான். (குறுந். 178) 9. நிலைதவறாத வாய்மையையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையையுடையவர். (நற். 1) 10. எம்மைப்போலப் புல்லிய உளைபோன்ற மயிரினையுடைய புதல்வனைப் பயந்து நெல்லையுடைய நெடுநகர்க்கண் நின்னையின்றியிருப்ப என்ன கடமையையுடையள். (அகம். 176) இது தோழி கூற்று. 11. தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருளில்லையென்று கூறி வந்திரந்தவர்க்குச் சிறிதுங் கொடாதிருத்தல் இழிவாமென்றுகருதிக் காட்டைக் கடந்துபோய்த் தேடுதலைக் கருதின பொருள் நன்கு மதிக்கும் பொருளாயினும் அருந்ததி போலே எல்லோருக்குந் தொழுது வாழ்த்தும்படி விளங்கிய கற்பினை யுடையவளுடைய காமச்செவ்வியாற் பெருமையை யுடையவாய மெல்லியவாகிய தோள்களைப் பிரியாதிருத்தல் நின் மனத்திற்குப் பொருளாயிருக்குமாயின் அதுவே பொருளாவதல்லது பிரிகின்றது பொருளாகுமோ? (கலி. 2) 12. இவற்றை முயங்கலை விடுகவென்று சொல்லத் தாம் மயங்கி யாம் ஒழியுமென்னவும் உடன்படாராய் இம்முலைகளைப் |