யென அதன் பயன்பற்றி உவமித்தமையின் இது பயனுவமையாம். “துடிபோலுமிடை” என்புழி மேலுங்கீழும் அகன்று நடுவே ஒடுங்கியிருக்கு மிடைக்கு, அங்ஙனமொடுங்கியிருக்கும் துடியை எடுத்துக்காட்டித், துடிபோலும் இடையென உவமித்தமையான் இது வடிவுவமையாம். “பவளம் போலும் வாய்” என்புழி வாயின் செந்நிறத்தை உணர்த்துதற்குச் சிவந்த பவளத்தை எடுத்துக்காட்டிப் பவளம் போலும் வாயென உவமித்தமையின் இது நிறவுவமையாம். இங்ஙனம் நான்குவகையாக உவமித்தல்பற்றியே தொல்காப்பியரும் “வினை பயன் மெய் உரு என்ற நான்கே--வகைபெறவந்த உவமத் தோற்றம்” என்றார். உவமைகள் “வினை பயன் மெய் யுரு” என்ற நான்கனுள் ஒவ்வொன்றேபற்றி வருதலன்றி இரண்டும் மூன்றும் நான்கும் பற்றியும் வரும். அங்ஙனமாதலை “பிறையெயிறு”, “அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி--கையாடுவட்டிற்றோன்றும்” என்னுமுதாரணங்களில் வைத்து உணர்ந்துகொள்க. பிறை, எயிற்றுக்கு நிறமும் வடிவும்பற்றி உவமஞ் செய்யப்பட்டது. பிறவும் இங்ஙனம் வரும் உவமைகளை இன்னதின்னதுபற்றி வந்ததென உய்த்துணர்ந்துகொள்க. இனி, ஒன்றை உவமிக்குங்கால் உவமேயப் பொருளிலும் உவமைப்பொரு ளுயர்ந்ததாக விருத்தல்வேண்டும். ஏனெனின்? உவமைப்பொரு ளிழிந்ததாயிற் கேட்போனுக்குப் பொருட்கண் மனஞ் செல்லாதாகலான். உயர்ந்ததாயின் அவ்வுயர்ச்சிபற்றிக் கேட்போனுக்குப் பொருட்கண் மனஞ்சென்று அதனையும் அதன் மேன்மையையும் அறிந்துகொள்வான் என்றபடி. “பொன் மேனி” என்புழி பொன்னி னுயர்ச்சிபற்றிப் பொருளாகிய மேனிக்கண்ணே கருத்துச் சென்று அதனையும் அதன் சிறப்பையுங் கேட்போன் உணர்ந்துகொள்ளும் என்பது கருத்தாம். அதுபற்றியே, “உயர்ந்ததன்மேற்றே உள்ளுங்காலை” என்றார் தொல்காப்பியரும். உவமையையும் பொருளையும் பேதமாகக் கூறாது ஒன்றாக்கி “வாயே பவளம்”, “வாய் பவளமாக” “வாயாகிய பவளம்” என்பனபோல அபேதமாகக் கூறுவது முண்டு. இவற்றை இக்காலத்தார் உருவகமென்பர். இனி, வினை முதலிய நான்கும்பற்றி ஒன்றை உவமிக்குங்கால் அவ்வுவமை பொருளின்கணுள்ள சிறப்பும், அழகும், |