பக்கம் எண் :

பொருளதிகாரம்105

காதலும், வலியும், இழிவும் என்னும் ஐந்தையும் இடமாகக் கொண்டு தோன்றும், அங்ஙனந் தோன்றுமாற்றை,

முரசு முழங்குதானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிஞ.

என்புழி, நிருத்த கீத வாச்சியம் என்னும் மூன்றோடுங் கூடிப் பாட்டுத் தோற்றம்பெற்றுச் சிறப்படைந்ததற்கு அரசர் மூவருங் கூடி அரசவையிருந்த தோற்றம் அவ்வவைக்குச் சிறப்பளித்தமையை உவமை கூறுதலானே, சிறப்பை யிடமாகக்கொண்டு பிறந்ததெனப்படுதலானும், ‘ஓவத்தன்ன விடனுடை வரைப்பின்’ என்புழி, ஓவம்போன்ற செயற்கை யழகையுடைய இட மென்றமையான், அந்நகரினது செயற்கையழகையே இடமாகக் கொண்டு பிறந்ததெனப்படுதலானும், “பாவையன்ன பலராய் மாண்கவின்” என்புழி, மகளிரிடத்துள்ள காதலை யிடமாகக்கொண்டு பாவையன்னவென்று கூறுதலின், இவ்வுவமை காதல் நிலைக்களமாகப் பிறந்ததெனப்படுதலானும், “அரிமாவன்ன அணங்குடைத்துப்பின்” என்புழி, பகைவரைக் கொல்லுதற்கு வலியே காரணமாகலின் அது காரணமாக அரிமாவை உவமை கூறுதலின், வலியை நிலைக்களமாகக் கொண்டு பிறந்த தெனப்படுதலானும், “அரவு நுங்குமதியின் நுதலொளி கரப்ப” என்புழி, நுதலொளி குறைந்தமைக்கு அரவு நுங்குமதியை உவமை கூறினமையின் இது இழிபை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததெனப்படுதலானும் அறிந்துகொள்க.

இன்னும் உவமை, சுட்டிக்கூறும் உவமையும் சுட்டிக்கூறா வுவமையுமென இரண்டுவகைப்படும், சுட்டிக்கூறும் உவமையாவது பொதுத்தன்மையை வெளிப்படையாகச் சுட்டிக்கூறும் உவமை. அங்ஙனம் கூறாதது சுட்டிக்கூறா வுவமையாகும். “பவளம்போற் செந்துவர்வாய்” என்புழி உவமானம் உவமேயம் என்னும் இரண்டற்கும் பொதுத்தன்மையாகிய செம்மையை யிதுவென்று இங்கே சுட்டிக் கூறினமையின் இது சுட்டிக்கூறிய வுவமையாகும். “பவளவா” யென்புழி அங்ஙனங் கூறாமையிற் சுட்டிக்கூறா வுவமையாகும். சுட்டிக்கூறும் உவமை விரியுவமையென்றும், சுட்டிக்கூறா வுவமை தொகையுவமையென்றுங் கூறப்படும். உவமை கூறுங்கால் உவமேயத்தோடு ஒத்த குணமுடையவற்றையே எடுத்து ஒப்புமை கூறவேண்டும். ஒவ்வாதவற்றை