1 “மாரி யம்பின் மழைத்தோற் சோழர்” (அகம். 336) எனவும், 2 “கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்” (அகம். 176) எனவும், “பொன் மேனி” எனவும் வரும். இவற்றுள், உவமையுயர்ச்சியானே உவமிக்கப்படும்பொருட்குச் சிறப்பெய்துவித்தவாறு கண்டுகொள்க. ‘உள்ளுங்காலை’ என்றதனான் ‘முன்னத்தி னுணருங்கிளவி’ (தொ. சொ. 459) யான் உவமங் கோடலும், இழிந்த பொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச் செயல்வேண்டு மெனவுங் கொள்க. அவை: ‘என் 3யானை’, ‘என்பாவை’ என்றவழி, அவைபோலும் என்னுங் குறிப்புடையான், பொருள் கூறிற்றிலனாயினும், அவன் குறிப்பினான் அவை வினையுவமையெனவும் மெய்யுவமையெனவும்படும். 4இவற்றுக்கு நிலைக்களங்காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும்; அவை பற்றாது சொல்லுதல் குற்றமாகலின். “அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.” (குறள். 109--1)
1. மாரி--மேகம். அது மழையைப் பெய்து பயிர்களை வளர்த்துப் பயன்றரல்போல் அம்பும் பகைவரைக் கொன்று பொருட் பயன் விளைத்தலின் பயவுவமை என்பதற்கு உதாரணமாகக் காட்டினார். வென்வேல் என்று முன்னும், மழைத்தோல் என்று பின்னும் வருதலின், மாரியீகை என்னும் பாடம் பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. ‘மாரியீகை’ தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம். அவ்வாறே பேராசிரியர் பாடங்கொண்டு பயவுவமைக்குக் காட்டினாரோ என்பது ஆராயத்தக்கது. 2. கடல்--வடிவுவமை. 3. யானை--வினையுவமை. பாவை--வடிவுவமை. 4. இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும் என்பது, இவற்றுக்கு நிலைக்களம் சிறப்புங் காதலும் நலனும் வலியும் என்பது சொல்லும் என்றிருத்தல் வேண்டும். சொல்லும் என்றது ஆசிரியனை. அவன் சொல்லுதலை 279-ம், 280-ம் சூத்திரங்களானறிக. |