கருத்து,--1 அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்றமைக்கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றனம், அதுபோலவென்பதாகலான், உவமைக்குப் பிறிதொரு பொருள் 2எதிர்ந்து உவமஞ்செய்யாது ஆண்டுப் 3பிறந்தனவற்றொடு4நோக்கிக் 5கருத்தினாற் கொள்ள வைத்தலின் இஃது உள்ளுறை யுவமமாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசிகளையுந் தொழிலோடு விருந்தோம்புதற்றொழில் உவமங்கொள்ள நின்றமையின் வினையுவமப் போலியாயிற்று. இங்ஙனங் கூறவே, 6இதனை இப்பொருண்மைத்தென்பதெல்லாம் உணருமா7றென்னையெனின், முன்னர், “துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே.” (298) எனல்வேண்டியது இதன் அருமை நோக்கியன்றேயென்பது. அல்லாக்காற், ‘கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை--சுரும்புபசிகளையும் பெரும்புன லூர’ என்பது 8பயமிலவென்பது கூறலாமென்பது. “கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே.” (ஐங்குறு. 12)
1. கரும்புபோல்வர் -- பரத்தையர். பாத்திபோன்றது -- கோயில். தாமரைபோன்றவள் -- தலைவி. சுரும்புபோல்வர் -- விருந்தினர் என உள்ளுறைப் பொருள் கொள்ளப்பட்டது. 2. பிறிதொரு பொருள் என்பதனைக், கொள்ள வைத்தலின் என்பதனோடு இயைக்க. எதிர்ந்து--எதிராக வைத்து. 3. பிறந்தன--உவம நிலங்களுட் பிறந்த உள்ளுறைகள். உள்ளுறையாகிய உவமேயப் பொருள்கள் தோன்றற்கு இடம் உவமைகளாதலின் உவமநிலம் என்றார். 4. நோக்கல்--உள்ளுறையோடு உவமையைச் சார்த்தி நோக்கல். இதனை ‘பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி’ என்பதன் (298) உரை நோக்கி அறிக. 5. கருத்தினாற் கொள்ள வைத்தலின் என்பதற்குச் செயப்படுபொருள்--பிறிதொருபொருள் என்பது. 6. இதனை--இவ்வுவமையை. 7. என்னை--எவ்வாறு. 8. பயமில கூறலாம் என்றது--பயன்படாதவற்றைச் சொல்வதாக முடியுமென்றபடி. பயமிலவென்பது என்பதில் ‘என்பது’ என்றது வேண்டியதில்லை. பிரதி எழுதுவோராற் சேர்க்கப்பட்டதுபோலும். |