பக்கம் எண் :

பொருளதிகாரம்157

என்பது பயவுவமப் போலி இதனுட் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக் கேதுவாகியதொன்று விளங்கக் கூறியதிலளாயினும் இழிந்தவேழம் உயர்ந்த கரும்பிற் பூக்குமெனவே 1அவற்றிற்கும் இழிபுயர்வாமென்பதொன்றில்லை; 2எல்லாரும் இன்பங் கோடற்குரியர் தலைமகற்கென்றமையின், யாமும் பரத்தையரும் அவற்கு ஒத்தனமென்றமையின் அவை கூறினாளென்பது.

“நீருறை கோழி நீலச் சேவல்
 கூருகிர்ப் பேடை 3வயாஅ மூர
 புளிங்காய் வேட்கைத் தன்றுநின்
 மலர்ந்த மார்பிவள் 4வயவு நோய்க்கே.”

(ஐங்குறு. 51)

என்பதும் அது. நீருறை கோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப் பெடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற்பயத்தவாகும், அதுபோல நின்மார்பு நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளுமென்றவாறு. புளிங்காய் வேட்கைத்தென்பது நின் மார்புதான் இவளை நயவாதாயினும் இவடானே நின்மார்பை நயந்து பயம்பெற்றாள்போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற் பயத்தளாகும்; புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாறுபோல என்பது.

“ஒன்றே னல்லெ னொன்றுவென் குன்றத்துப்
 பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை
 குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
 நின்றுகொய மலரு நாடனொ
 டொன்றேன் றோழி 5யொன்றி னானே.”

(குறுந். 208)

என்பது மெய்யுவமப் போலி; என்னை? மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரொடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினேனென்றமையின்.


1. அவற்றிற்கும் என்றது வேழத்தையும் கரும்பையும். இப்பாடத்திற்கு உம்மை வேண்டியதில்லை. அவற்கும் என்றும் பாடமுள்ளது. அவற்கு என்பது பின்வருந் தலைமகனைக் குறிக்கும். அப்பாடமே சிறந்தது.

2. எல்லாரும் என்றது உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாகிய எல்லா மகளிரும் என்றபடி.

3. வயாஅம்--கருப்பத்தா லுண்டான வேட்கை தீரும் என்றபடி.

4. வயவுநோய்--கருப்பத்தாலுண்டான வேட்கை நோய்.

5. என்றிசினானே எனவும் பாடம்.