பக்கம் எண் :

பொருளதிகாரம்159

*சிறப்பாமெனவும், வாளாது நீர்நாய் வாளைபெறூஉமூரனென்றதனான் ஒரு பயமின்றெனவுங் கொள்க. 1“பிறப்பொடு வரூஉந் திறத்த” தென்றது தலைமகனால் இவ்வாறு திறப்பாடு வேறு முளவென்பதூஉங் கொள்க அவை:--

“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு
 வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப
 அதனாற், றன்சொ லுணர்ந்தோர் மேனி
 பொன்போற் செய்யு மூர்கிழ வோனே.”

(ஐங். 41)

என்றவழித் ‘தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை’ யென்பது 2(இன்னுந்) தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று. வெண்பூம் பொய்கைத்து அவனூரென்பது தலைமகள் பசப்பு நிறம்பற்றி உவமையாயிற்று. ஆதலான் வினையுவமமும் உருவுவமமும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்கு வருதலும் உடையவென்பது. 3(அவை “தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு......பொன்போற் செய்யு மூர்கிழ வோனே” என்ற வழி) 4இன்ன திறத்தனென்றதனானே இத்தன்மைத்தாகிய ஊரனையாளெனச் சொல்லுதலுந், தலைவனூரின்க ணுள்ளன சொல்லத் தலைவற்கேயன்றித் தலைவிக்கேற்ற உவமை தோன்றச் செய்தலு 5மென உவமங் கூறியவழி உள்ளுறையுவமங் கோடலும், பிறவாறு வருவன வுளவாயினும் எல்லாங் கொள்க.


*சிறப்பின்று என்பது முற்பாடம். சிறப்பாம் எனப் பாடம் உள்ளது. அதுவே பொருத்தம்.

1. பிறப்பொடு வரூஉந் திறத்த வென்றது தலைமகனால் என்பது, பிறப்பினும் வரூஉந் திறத்தியலென்றதனா லென்றிருத்தல்வேண்டும். என்றதனால் என்பதனோடு சில எழுத்துக்கள் சேர்த்து ‘என்றது தலைமகனால்’ என்றெழுதப்பட்டது.

2. இன்னும் என்பது தின்னும் என்பதைச் சிதைத்து மீட்டும் எழுதப்பட்டதுபோலும். அது வேண்டியதில்லை. திறம்--வகை. இது பின் கூறப்படுகின்றது.

3. பகரக் கோட்டில் அடைத்த வாக்கியம் முன்வந்ததையே திருப்பியெழுதப்பட்டது. அது நீக்கப்படல்வேண்டும்.

4. “இன்ன திறத்தன்”--இன்னுந் ‘திறத்தியல்’ என்றிருத்தல்வேண்டும்.

5. மென--மேனை என்று பாடமுள்ளது. இது உவமத்தோடு சேர்த்து ஏனையுவமம் என்று பிரிக்கப்படும். அதுவே பொருத்தம்.