பக்கம் எண் :

166உவமவியல்

தோன்றினும் தோன்றுமென்பதல்லது ஒருதலையாக உள்ளுறையுவமங் கோடல்வேண்டுவதன்று. என்னை?

“தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
 பிள்ளை தின்னு முதலைத் தவனூர்.”

(ஐங்கு. 24)

என்றாற்போலக் கூறாது, அந்நாட்டுக் 1கருங்களமர் முதலாயினார் வருந்தாமற் பெறும்பொருள் பிறநாட்டார்க்கு விருந்து செய்யத்தகுமென்று அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது. தோழி பொருந்தியவழிக் கூறமாறு முன் காட்டப்பட்டன. செவிலி பொருந்துவழிக் கூறுவனவுங் கண்டுகொள்க. இலக்கணமுண்மையின் 2அவையும் உளவென்பது கருத்து.

(31)

[வேறுபடவரு முவமைக ளிவையெனல்]

307. வேறுபட வந்த வுவமத் தோற்றங்
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்

இது மேலெல்லாம் இருவகை யுவமமுங் கூறி இன்னும் ஏனையுவமப்பகுதியே கூறுவான் எய்தாததெய்துவித்தது.

இ--ள் : வேறுபட வந்த உவமத் தோற்றம்--வேறுபாடு தோன்றவந்த உவமைச்சாதி, தோற்றமெனினும் பிறப்பெனினுஞ் சாதியெனினும் ஒக்கும்; கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்--அங்ஙனம் வேறுபடவந்தனவாயினும் மேற் கூறிய பகுதியானே கொள்ளுமிடனறிந்து கொளுத்துக என்றவாறு.

கொளுவுதலென்பது ‘கொளாஅல்’ என்பதாயிற்று.

வேறுபட வருதலென்பது:- உவமைக்கும் பொருட்கும் 3ஒப்புமை மாறுபடக் கூறுதலும்: ஒப்புமை கூறாது 4பெயர் போல்வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும்,


1. கருங்களமர்--பறையர். சேனாவரையரும் வெண்களமர் கருங்களமர் என்பன பண்பு குறியாது சாதிகுறித்து வந்ததென்பர். (சொல். கிளவி. 17-ம் சூத்திர உரை நோக்குக.)

2. அவை என்றது உதாரணங்களை.

3. ஒப்புமை மாறுபடக் கூறலும் என்ற பாடமே பொருத்தம். என்னை? “வையங் காவலர்” என்ற உதாரணம் அதற்கே காட்டப்படலின்.

4. பெயர்போல்வனவற்றான் மறுத்துக்கூறற் குதாரணம் பின்காட்டும் “கண்ணன்வனிவன் மாறன்” என்பது. இது வேற்றுமையணியுள் அடங்கும்