பக்கம் எண் :

பொருளதிகாரம்179

“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற்
 சேர்ந்துடன் செறிந்த 1குறங்கிற் குறங்கென
 மால்வரை யொழுகிய வாழை வாழைப்
 பூவெனப் பொலிந்த வோதி யோதி
 நெறிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி.”

(சிறுபா. 19)

என்பதூஉம் அடுக்கிய தோற்றமெனப்படாதோவெனின், படாதன்றே; யானைக்கைபோலுங் குறங்கு; குறங்குபோலும் வாழையெனவடுக்கிச் சொல்லாது குறங்கினையுடையாளென்று துணித்துக் கூறியபின்னர்க் குறங்கென மால்வரை ஒழுகிய வாழையென்றானாதலினென்பது. தோற்றமென்றதனான் உவமையும் பொருளுமாக நிறீஇ உவமவுருபு தோன்றக் கூறுங்கால் அடுக்கப்படுவதென்பது.

(36)

[உவமை நிரனிறையாகவும் வருமெனல்]

312.2நிரனிறுத் தமைத்த னிரனிறை சுண்ணம்
வரைநிலை வைத்த மூன்றலங் கடையே.

இதுவும் எய்தாதன வரையறையுடைமையிற் கூறியவற்றோடு இனமாகலின் உவமத்திற்காவதொன் றுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை--உவமையையும் நிரலே நிறுத்துப் பொருளினையும் நிரலே நிறுத்து ஒப்புமை கூறின் அது நிரனிறையெனப்படும், சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங் கடையே--சுண்ணத்தினை 3வரைந்த நிலைமையான் வந்த சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்றுமென்னும் மூன்றுமல்லாத இடத்து என்றவாறு.


1. குறங்கின் என்பது குறங்கெனவரு மதற்கு உவமையாகாது தான் துணிக்கப்பட்டுநின்று பின்வரும் ஓதி முதலியவற்றோடும் எண்ணப்பட்டு உடைய என்னும் (தொக்குநின்ற பொருளாகிய) பெயரெச்சத்தோடு கூடி விறலியர் என்னும் பெயர்கோடலின் உவமைக் குவமையாகாது என்றபடி.

2. இளம்பூரணர் இச் சூத்திரத்தையும் இதற்கு முற் சூத்திரத்தையும் ஒன்றாக்கி, இச் சூத்திரத்து ’வரைநிலைவைத்த’ என்பதை ‘வரைநிலை வந்த’ எனப் பாடங் கொண்டு இம் மூன்றுமல்லாதவிடத்து உவமை பல அடுக்கிவருதல் கொள்ளப்படாது என்பர்.

3. வரைதல்--நீக்கல். வந்த என்று பொருள் கூறலின் ‘வைத்த’ என்பது ‘வந்த’ என்றிருத்தல் வேண்டும்போலும்.