ஏதுவாகியதோர் கருவி அச்செய்யுட்குளதாகச் செய்தல்; அவையும் பலவாதலின் ‘வகை’ என்றானென்பது. 1மாட்டென்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் 2நின்றதனோடு வந்ததனை ஒருதொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல். வண்ணமென்பது, ஒரு பாவின்கண்ணே நிகழும் ஓசை விகற்பம். எனாவென்பன, எண்ணிடைச் சொல். யாப்பியல்வகையின் ஆறுதலையிட்ட அந்நாலைந்துமென்பது, யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறுமென்றவாறு; இவை யாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதியவென விதந்தோதவே: இனிக் கூறும் உறுப்பெட்டும் இன்றியமையாமை இல்லையென்றவாறு. “அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ.” என்பது, இக்கூறப்பட்ட எண்வகை வனப்பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறுந் தொகுப்ப முப்பத்துநான்கு உறுப்பா மென்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்குக் காரணம் அவற்றைக் கூறும்வழிச் (547) சொல்லுதும். நல்லிசைப் புலவர் செய்யுளென்பது, இவ்வுறுப்பனைத்துங் குறையாமற் செய்யப்படுவன நல்லிசைப் புலவர் செய்யுஞ் செய்யுளெனப்படு மென்றவாறு நல்லிசைப் புலவர் செய்யுள் எனவே,
1. மாட்டென்பது அகன்றும் அணுகியும் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து தொடராகக் கூட்டிமுடித்தல் என்பர் நச்சினார்க்கினியர். ஆயினும் அவர் சிலஇடங்களில் தூரமான அடிகளை வலிந்துகொண்டுவந்து கூட்டல் சிறப்பின்று. 2. நின்றதனோடு வந்ததனை ஒருதொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல் என்றது, “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே. (பட்டி. 218-20) என நின்ற அடிகளோடு, ‘வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே.’ என வருமடிகளை நெஞ்சே! அவள்தோள் கோலினுந் தண்ணிய வாதலான் வயங்கிழையொழிய வாரேன் என ஒருதொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தலை. |