பக்கம் எண் :

212செய்யுளியல்

மாகலின், அதனைத் தளையென்னாமோவெனின், அங்ஙனங் கொள்ளின் இரு சீரடிக்கண் தளை வேண்டாதானாம்; ஆகவே, 1ஒரு வழிக் கொண்டு ஒருவழிக் கொள்ளாமை ‘மயங்கக் கூறல்’ (663) என்னுங் குற்றமாமென்பது; அல்லதூஉம், 2அங்ஙன மன்றி வருமாயின் அடிக்கெல்லாம் பொதுவகையால் தளையுறுப் பெனப்படாது. எழுத்தும் அசையும்போல 3யாண்டும் வருவன வெல்லாம் உறுப்பெனப்படுவனவென்றற்கு,

“இணை நூன் முடிபு தன்னூன் மேற்றே.”

என்பதனாற் காக்கைபாடினியர் ஓதிய தளையிலக்கணம் 4ஈண்டுங் கோடல்வேண்டுமெனின், அதுவே கருத்தாயின் 5அவர்க்கும் 6இவர் முடிவேபற்றித் 7தளை களையல்வேண்டும்; அல்லதூஉம், இவர்க்கு 8இளையரான காக்கைபாடினியார் தளை கொண்டிலரென்பது 9இதனாற் பெற்றாம். தளைவேண்டினார் பிற்காலத்து ஓராசிரியரென்பது; என்னை?

“வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்
றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த
நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்.”


1. நாற்சீரடியுள் இருசீரியைந்ததனைத் தளை என்று கொள்ளுதலும், இருசீரடியுள் தளை என்றுகொள்ளாது குறளடியென்று கொள்ளுதலும் வரையறையின்றி மயங்கக்கூறலாம் என்பது கருத்து.

2. அங்ஙனமன்றி வருமென்றுகொள்ளின், எல்லாவடிக்கும் பொதுவிலக்கணமாக உறுப்பெனப்படாமையின் அது பொருந்தாது என்றபடி.

3. யாண்டும் வருவன--எல்லா அடிக்கண்ணும் வருவன. எழுத்தும் அசையும் யாண்டும் உறுப்பாய்க் கோடல்போலத் தளையும் குறடிக்கண்ணும் அல்லாதவடிக்கண்ணும் வருவன வெல்லாம் உறுப்பென்று கொள்ளற்குத் தம்மோடொத்த நூலாசிரியர்கொண்ட தளை இலக்கணம் இவருங் கோடல்வேண்டும். கொள்ளின் யாண்டுந்தளையு முறுப்பாகக் கொள்ளலாம் என்றபடி.

4. ஈண்டும்--இந்நூற்கண்ணும்.

5. அவர் காக்கைபாடினியார்.

6. இவர்--தொல்காப்பியர்.

7. தளைகளைதல்--தளைய நீக்கல்.

8. இளையரென்றது--ஒருசாலை மாணாக்கராதல் பற்றிப் போலும்.

9. இதனால் என்பது பின்வரும் ‘தளைவேண்டினார்......ஓராசிரியர்’ என்னும் வாக்கியத்தைச் சுட்டிநின்றது.