ஈண்டோதியதென்னையெனின்,--ஒற்று அளபெடையான் அசை நிலையுஞ் சீர்நிலையுங் கோடலின், ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றிகரமும் உயிராயினும் ஒற்றுப்போல எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படாதென்றற்குக் கூறினானென்பது; அஃதேல், “ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்” (320) என்பவாகலின், அதனை ஈண்டுத் தழாஅற்கவெனின், அக்கருத்தினால் அவ்வாறும் அமையுமென்பது; அற்றன்று, இதனை மேற்புள்ளி பெறுமென்றிலனாதலான் புள்ளி பெறுமென்றற்கும். “ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்.” (320) என்றானென்பது. இனி, ஒரு சாரார் மாத்திரையென்றது 1எழுத்தலோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம். சிறுபான்மை ஒரோவழி வரினும் அத்துணையானே அஃது, இன்றியமையாத உறுப்போடு எண்ணப்படாதென மறுக்க. உறுப்பன்று என்றார்க்குக் குறிப்பிசை யாண்டுப் பெறுதுமெனின், “அசையுஞ் சீரு மிசையோடு சேர்த்தி.” (323) என்புழிப், பெறுதுமென்பது. இனி, “எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன” என்பதனையும் எழுத்திலக்கணத்திற்றிரியாமற் செய்யுள் செய்க வென்றவாறென்பவெனின், அஃதே கருத்தாயிற் சொல்லோத்தினுள்ளும் எழுத்திலக்கணமாகிய 2மயக்கமும், 3நிலையும் முதலாகிய இலக்கணத்திற் றிரியாமற் சொல்லாராய்தல் வேண்டுமெனவும், இவ்வதிகாரத்துள்ளும் ‘எழுத்தியல் வகையும் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன’ எனவுஞ் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க,
1. எழுத்தல் ஓசையாகிய குறிப்பிசையை 323-ம் சூத்திர உரையுட் காண்க. 2. மயக்கம்--இடைநிலை மயக்கம். 3. நிலை--முதனிலை; இறுதிநிலை. |