பக்கம் எண் :

பொருளதிகாரம்23

அணங்கென்பன: பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய 1பதினெண் கணனும், 2நிரயப்பாலரும், பிறரும்3அணங்குதற் றொழிலராகிய சவந்தின்பெண்டிர் முதலாயினாரும் 4உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன: அரிமா முதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார்: தீத்தொழில் புரிவார். இறையெனப்படுவார்: தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். ‘பிணங்கல் சாலா அச்சம்’ என்றதனான் முன்னைய போல இவை தன்கட்டோன்றலும் பிறன்கட்டோன்றலுமென்னுந் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள்பற்றியே வருமென்பது.

உதாரணம்:--

“யானை தாக்கினு மரவுமேற் செலினு
 நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
5சூன்மகண் மாறா மறம்பூண் வாழ்க்கை.”

(பெரும்பா-134-6)

என்பதனுள், அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று.

“ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை
6வெரூஉதுங் காணுங் கடை.”

(கலி-87)

இது, கள்வர் பொருளாக அச்சம் பிறந்தது; என்னை? அவனைக் கள்வர்பாற் சார்த்தியுரைத்தமையின்.

7”எருத்துமே னோக்குறின் வாழலே மென்னுங்
 கருத்திற்கை கூப்பிப் பழகி--யெருத்திறைஞ்சிக்


1. பதினெண் கணங்களாவன: தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் பூதமும் வேதாளமும் தாராகணமும் போகபூமியினரும் ஆகாய வாசிகளும் என இவர்.

2. நிரயப்பாலர்--நிரயத் தலைவர். என்றது காலன் முதலியோரை. நிரயபாலகர் என்றும் பாடம்.

3. அணங்கல்--வருத்தல்.

4. உரும்--இடி.

5. சூல்--கரு.

6. வெரூஉதும்--அஞ்சுதும்.

7. எருத்து மேனோக்குறின்--கழுத்தை நிமிர்த்தி நோக்கின். வேந்து கண்டறியா என்க. அச்சத்தாற் கழுத்தை நிமிர்த்திப் பாரார் என்றமையின் அச்சச் சுவையாயிற்று.