பக்கம் எண் :

பொருளதிகாரம்25

கல்வியென்பது, தவமுதலாகிய விச்சை, தறுகணென்பது, அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமையென்பது, இன்பமும் பொருளும் இறப்பப்பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடையென்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல்.

உதாரணம்:

1”வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க்
 கல்லாமை காட்டி யவள்.”

(கலி-141)

என்பது, கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கல்லாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின்.

2”அடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன்
 மன்றம் படர்வித் தவள்.”

(கலி-141)

என்பது தறுகண்.

“கழியாக் காதல ராயினுஞ் சான்றோர்
3பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்.”

(அகம்-112)

என்பது புகழ்.

“வையம்,
 புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு
 மின்னா விடும்பைசெய் தாள்.”

(கலி-141)

என்பது கொடை.

“தன்னகம் பக்க குறுநடைப் புறவின்
 றபுதிகண் டஞ்சிச் 4சீரை புக்க
 வரையா வீகை யுரவோன் மருக.”

(புற-43)

என்பதுமது.

‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க.


1. வல்லார் முற் சொல்வல்லேனாகிய என்னை என்றது கல்வி பற்றிய பெருமிதம்.

2. அடன்மாமேலாற்றுவேன் என்றது தறுகண் பற்றிய பெருமிதம்.

3. பழியொடு வரூஉ மின்பம் வெஃகாமை--புகழ்பற்றிய பெருமிதம்.

4. சீரை--துலைக்கோற்றட்டு. சீரைபுக்கது--கொடைபற்றிய வீரம்.