“பல்லிருங் கூந்தன் மகளி ரொல்லா 1முயக்கிடைக் குழைகவென் றாரே.” (புறம்-73) என்பது, காமம்பற்றிய பெருமிதம். பிறவும் வருவன உளவேற் கொள்க. இது தன்கட்டோன்றிய பொருள்பற்றி வரும். என்னை? கல்வியும் தறுகண்மையும் 2இசைமையும் வேட்கையுங் கொடைத் தொழிலுந் தன்கண்ணவாகலின். (9) [வெகுளிச்சுவை இத்துணையது எனல்] 258. | உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. |
இஃது, ஏழாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வெகுளி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : உறுப்பறையென்பது, கை குறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்; அலையென்பது, கோல்கொண்டலைத்தன் முதலாயின; கொலை யென்பது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்: இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும் என்றவாறு. ‘வெறுப்பின்’ என்றதனான் ஊடற்கண்தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க. 3”முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று” (கலி-52) என்பது, உறுப்பறையான் வந்த வெகுளி.
1. முயக்கிடைக்குழைகவென்றமையின் முயக்கிடைக்குழையாமை வீரம் என்க. 2. இசைமையும் வேட்கையும் என்பது இசைவேட்கையும் எனவும் பாடம். சூத்திரக்கருத்திற்கது பொருத்தம். உரைகாரர் காமமுங் கூறலின் அங்ஙனமுமிருக்கலாம். அங்ஙனேல் வேட்கை பின்வருதல் நலம். 3. முறஞ்செவி...புலிசெற்று--முறம்போலும் செவியாகிய மறைப்பு இடமாக வந்து பாய்ந்து மாறுபாட்டைச் செய்த புலியை வெகுண்டு எனவே புலிபாய்ந்து தன் உறுப்பைக் கடித்தலால் வெகுடலின் உறுப்பறையான் வந்த வெகுளியாயிற்று. |