“நின்மகன், படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇ.” (புற-278) என்பது, குடிகோள்பற்றி வந்த வெகுளி; என்னை? தன்மகன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின். 1”நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி யகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்.” (புறம்-300) என்பதுமது. 2”வரிவயம் பொருத வயக்களிறு போல வின்னு மாறாது சினனே.” (புறம்-100) என்பதனுள், அலைபற்றிச் சினம் பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப்புண்டலை நினைந்து சினங்கொள்ளா நின்ற தென்றமையின். “உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை.” (புற-72) என்பது, கொலைபொருளாக வெகுளிச் சுவை பிறந்தது; என்னை? சிறு சொற் சொல்லுதலென்பது, புகழ்கொன்றுரைத்தலாகலின். “செய்தவ றில்வழி யாங்குச் 2சினவுவாய்.” (கலி-87) என்பது, ஊடற்கண் 4தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவுமன்ன. இன்னும் அவ்விலேசானே, “நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை.” (புற-125)
1. நேற்றுப் பகல் நீ யெறிந்தவனுடைய தம்பி, தமது குடியிலுள்ள தமையனைக் கொன்றமையின் குன்றிபோலச் சிவந்து சுழலுங் கண்ணனாயினான் என்றமையின் இது குடிகோள்பற்றி வந்த வெகுளி. குன்றி--குன்றுமணி, அகல்--மண்ணாலாயினும் உலோகங்களினாலாயினுஞ் செய்யப்படும் ஒருவகைச் சிறிய பாத்திரம். அது கண்ணின்வடிவிற் குவமை. 2. வரிவயம்--வரி பொருந்திய புலி. 3. சினவல்--வெகுளல். 4. தலைமகள் வெகுட்சி--ஆறாம் வேற்றுமைத்தொகை. |