பக்கம் எண் :

பொருளதிகாரம்5

யல்லது கைப்புச் சுவை பிறவாததுபோல, அப்பொருள் கண்ட வழியல்லது நகையும் அச்சமும் தோன்றா. ஒழிந்த காம முதலியனவும் அன்ன. இக்கருத்தேபற்றிப் பிற்காலத்து நாடக நூல் செய்த ஆசிரியரும்,

“இருவகை நிலத்தி னியல்வது சுவையே.”   (செயிற்றியம்)

என்றாரென்பது.

இனி, இருவகை நிலனென்பன 1உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதலன்றோவெனின், சுவையென்பது 2ஒப்பினானாய பெயராகலான் வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடிவருகின்றானொருவனை மற்றொருவன் கண்டவழி இவன் ‘வள்ளெயிற்றரிமா’ முதலாயின கண்டு அஞ்சினானென்றறிவதல்லது, வள்ளெயிற் றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று; தான் கண்டானாயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி, அச்சம்பிறவாதாகலான் 3உய்ப்போன் செய்தது 4காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின்,


1. உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் என்றது,--சுவைப்போன் நிகழ்த்திய சுவை அவன்மாட்டு நிகழும் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாதல் என்றவாறு. உய்த்தல்--அநுபவித்தல்--“காதல காத லறியாமை யுய்க்கிற்பின் -- ஏதில வேதிலார் நூல்” என்னுங் குறளுரை நோக்குக. அன்றியும். சமநிலை என்னுஞ் சுவையை -. “உய்ப்போர் சமணர் சாரணர்” என்று செயிற்றியங் கூறுகின்றதனாலு மறியப்படும்.

2. ஒப்பினானாய பெயரென்றது அறுவகைச் சுவைபோலச் சுவைக்கப்படுவதுபற்றி நகை முதலிய சுவைக்கும் சுவையென்று பெயராயிற்று என்றபடி. எனவே சுவைபோன்றது சுவை என்பது கருத்தாம்.

3. உய்ப்போன் செய்தது--சுவைப்போன் நிகழ்த்திய சுவை.

4. காண்போன் உய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் என்றது, சுவைத்தோனுடைய மெய்ப்பாட்டைக்கண்டு இவன் சுவைத்தான் என்று அறிந்தோன் செலுத்திய அறிவின் றன்மையால் அவனுக்கு அச்சுவை நிகழாது என்றபடி. காண்போர்க்குஞ் சுவைபிறக்கும் என்பது கூத்த நூலாருட் சிலர் கருத்து. அவர் கருத்தையே ஈண்டுப் பேராசிரியர் மறுத்தனர் என்க.