[தாவண்ணம் இதுவெனல்] 527. | தாஅ வண்ண மிடையிட்டு வந்த வெதுகைத் தென்ப. |
இ--ள் : இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் என்றவாறு. அவை: பொழிப்பும் ஒரூஉவுமாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது; அடியிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவதல்லது வண்ண வேற்றுமையாகாதென்பது. ஒரு செய்யுளுட் பல அடி வந்தால் அவை எல்லாம் இடையிட்டுத் தொடுத்தல்வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅவண்ணமெனப்படுமென்பது; எனவே, இவ்வண்ண வகைகளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக் கிடந்தனவல்ல; இவற்றை உறுப்பென்ற தன்மையாற் கந்திருவ நூலார் வண்ணங் கூறியவாறுபோல ஒரு செய்யுளுட் பலவும் வரப்பெறுமென்பதாம்; அவை, “உலக முவப்ப வலனேர்பு திரிதரு.” (முருகு. 1) எனவும், “உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை.” (ஐங்குறு. ப. 143) எனவும் வரும். பிறவுமன்ன. (215) [வல்லிசைவண்ணம் இதுவெனல்] 528. | வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். |
இ--ள் : வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயின்றுவரும் என்றவாறு. வல்லெழுத்துப் பயின்றுவருதலான் அப்பெயர்த்தாயிற்று. “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்.” (பட். 218) எனவும், “முட்டாட் டாமரைத் துஞ்சி.” (முருகு. 73) எனவும் வரும். பிறவும் அன்ன. (216) [மெல்லிசை வண்ணம் இதுவெனல்] 529. | மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே. |
இ--ள் : மெல்லெழுத்து மிகுவது மெல்லெழுத்து வண்ணம் என்று கூறியவாறு. |