பக்கம் எண் :

பொருளதிகாரம்605

ஒருசெய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச்செய்தால் இன்னாதாதலின் இவை 1உறுப்பெனப்பட்டு இடையிட்டு வருமென்றானென்பது. 2அவ்வாறு செய்யின் அவை 3மிறைக் கவியெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும்.

“பொன்னி னன்ன புன்னைநுண் டாது.”

(யா. வி. ப. 382)

என மெல்லெழுத்துப் பயின்றவாறு.

(217)

[இயைபுவண்ணம் இதுவெனல்]

530.இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே.

இ--ள் : இடையெழுத்து மிகுவது இயைபுவண்ணம் என்றவாறு.

“அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்.”

என இடையெழுத்து மிக்குவந்தமையின் இயைபுவண்ணமாயிற்று. மென்மை வன்மைக்கு இடைநிகர்வாகிய எழுத்தான் வருதலின் இயைபுவண்ண மென்றான்.

(218)

[அளபெடை வண்ணம் இதுவெனல்]

531. அளபெடை வண்ண மளபெடை பயிலும்.

இ--ள் : 4இரண்டளபெடையும் பயிலச் செய்வன அளபெடை வண்ணமாம் என்றவாறு.

“மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்.”

(அகம். 99)

என்பது, அளபெடை வண்ணம்.

“கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்.”

(மலைபடு. 352)

என்பதும் அது.

(219)

[நெடுஞ்சீர்வண்ணம் இதுவெனல்]

532.நெடுஞ்சீர் வண்ணநெட் டெழுத்துப் பயிலும்.

இ--ள் : நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் என்றவாறு. அது,

“மாவா ராதே மாவா ராதே.”

(புறம். 273)

என்பது, நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது.

(220)


1. உறுப்பு--அங்கம். அஃதாவது மெல்லெழுத்து மிகுதியும் வந்து சொற்கு உறுப்பாதல். எனவே வெறெழுத்தும் அவற்றோடு கூடிவரும் என்க.

2. அவ்வாறு பயிலச் செய்தல்--ஓரினமே பயிலச் செய்தல்.

3. மிறைக்கவி--சித்திரகவி.

4. இரண்டு--உயிர், மெய்.