அவையாவன:--முடித்துக்காட்டும் ஈற்றசை ஏகாரத்தானன்றி ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன; அவை:-- “தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன.” (560) எனவும், “உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்.” (ஐங்குறு. 21) எனவும், “கோடுயர் வெண்மண லேறி யோடுகல னெண்ணுந் துறைவன் றோழி.” எனவும், “ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி.” (கலி. கடவுள்) எனவும், “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ.” (அகம். 46) எனவும் வரும். இவை ஆசிரியவீற்றன. “குளிறு குரலருவிக் குன்றத் திதண்மேற் களிறு வருவது கண்டு--வெளிலென்ன லாயினான் பின்னை யணங்கிற் குயிரளித்துப் போயினான் யாண்டையான் போன்ம்.” என இதனுள் இறுதியடி முடியாத்தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. “கொடி யுவணத் தவணரோ.” எனக் கலிப்பாவுள் அரோவந்து பின் முடியாத்தன்மையின் முடிந்தது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பனவற்றான் ஆசிரியம் இறுமென வரையறுப்பாருண்மையின் அவ்வச் சொல்லானே அவை முடிந்தனவென்று கொள்வலெனின்,--அங்ஙனம் 1வரையறையிலவென்பது 2மேற்காட்டிய உதாரணங்களால் அறிந்தாமாகலின் அக்கடா வண்ணமென 3வரையறுப்பார் மேற்றென விடுக்க. (224)
1. ஆசிரியவீறு அங்ஙனம் வரையறையில வென்பது என்க. 2. மேற்காட்டிய உதாரணமென்றது “தவழ்பவை தாமுமவற்றோ ரன்ன” என்பது முதலாக தாங்காட்டிய உதாரணங்களை. அவற்றில் வேறீறுகளும் வருகின்றன என்றபடி. 3. வரையறுப்பார் என்றது இறுதிநிற்கும் எழுத்துக்களை வரையறுப்பார் மேற்று என்க. வண்ணமென என்பது இடையிற் சேர்த்து எழுதப்பட்டதுபோலும். அன்றேல் ஆசிரியன் மேற்றாகும். அவ்வாறு கொள்ளின் ஆசிரியற்கிழுக்காம். |