“யானே யீண்டை யேனே யென்னலனே யானோ நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே.” (குறுந். 97) என வரும். “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே.” (புறம். 235) என்பதும் அது. 1யாப்புப் பொருணோக்கியவாறுபோல இது பொருணோக்காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. (227) [எண்ணுவண்ணம் இதுவெனல்] 540. | எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். |
இ--ள் : எண்ணுப் பயில்வது எண்ணு வண்ணம் என்றவாறு. இஃது, அடி எண்ணுப் பயிறலான் எண்ணு வண்ணமெனக் காரணப் பெயராயிற்று; அவை, “நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி.” (அகம். 44) என்றாற்போல்வன. “நுதலுந் தோளுந் திதலை யல்குலும்.” (அகம். 119) என்பதும் அது. (228) [அகைப்புவண்ணம் இதுவெனல்] 541. | அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். |
இ--ள் : அறுத்தறுத்துப் பயில்வது அகைப்புவண்ணம் என்றவாறு. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்புவண்ணமென்னும் பெயர்பெற்றது, “வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி.” (குறுந். 110)
1. யாப்பு என்னும் உறுப்பிற்கும் இவ்வண்ணத்திற்கும் வேறுபாடு யாதெனின், அது பொருணோக்கியது இது ஓசை நோக்கியது. அன்றியும், அது அடியிறந்து பொருள் கொள்ளாதது இது அடியிறந்து பொருள்கொள்வது என்றபடி. |