தொகை முதலாகிய தொகை யெட்டுமென்றவாறு. அழகு, செய்யுண்மொழி யென்றதென்னையெனின்,--அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழியானே இடைச்சங்கத்தாரும் கடைச்சங்கத்தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார்; இக் காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடி முப்பது முதலாயின அம்மையெனப்படுமோ அழகெனப்படுமோவெனின்,--தாயபனுவலின்மையின் அம்மையெனப்படா வென்பது. இவற்றுள்ளும் ஒரோர் செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்றவகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். (236) [தொன்மை இதுவெனல்] 549. | தொன்மை தானே யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே. |
இது, தொன்மையுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : தொன்மையென்பது, உரைவிராஅய்ப் பழமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை, பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. (237) [தோல் இதுவெனல்] 550. | இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்மொழிப் புலவர். |
இது, முறையானே தோலென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்: கொச்சகக்கலியானும் ஆசிரியத்தானுஞ் செய்யப்படுவன. “யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது.” (461) என்றவழி, தேவபாணியும் காமமும் பொருளாகவன்றியும் கொச்சகக்கலி வருமென்றானாகலான் 1அவைமேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது.
1. அவைமேல்--தேவபாணியுங் காமமும் அல்லாதவற்றின் மேல். |