பக்கம் எண் :

616செய்யுளியல்

இ--ள் : இழு மென்மொழியான் விழுமியது நுவலினும்--மெல்லென்ற சொல்லான் அறம் பொருள் இன்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச்செய்வன; அவை செய்தகாலத்துள்ளன கண்டிலம்; 1பிற்காலத்து வந்தன கண்டுகொள்க.

பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும்--ஆசிரியப் பாட்டான் ஒரு கதை மேல் 2தொடுக்கப்பட்டன; அவையும் பொருட்டொடர்நிலை.

தோல் என மொழிப தொன்மொழிப் புலவர்--தோலென்று சொல்லுப புலவர் என்றவாறு.

‘தொன்மொழி’ என்றார், பழைய கதையைச் செய்தல் பற்றி; இது, முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும்.

(238)

[விருந்து இதுவெனல்]

551.விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.

இ--ள் : விருந்துதானும் புதிதாகப் பாடுந் தொடர்நிலை மேற்று என்றவாறு.

‘தானும்’ என்ற உம்மையான் முன்னைத் தோலெனப்பட்டதூஉம் பழைய கதையைப் புதிதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதைமேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறந்தது தழீஇயினா னென்பது. ‘புதுவது கிளந்த யாப்பின் மேற்று’ என்றதென்னையெனின்,--புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது. அது, முத்தொளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென வுணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப.

(239)

[இயைபு இதுவெனல்]

552. ஞகாரை முதலா ளகாரை யீற்றுப்
புள்ளி யிறுதி யியைபெனப் படுமே.

இஃது, இயைபுணர்த்துதல் நுதலிற்று.


1. பிற்காலத்து வந்தன சிந்தாமணி முதலியன என்பர் நச்சினார்க்கினியர்.

2. தேசிகப்பா என்பர் நச்சர். கூத்தராற்றுப்படை என்பர் இளம்பூரணர்.