இ--ள் : ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள வென்னும் பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யுஞ் செய்யுள் பொருட் டொடராகவுஞ் சொற்றொடராகவுஞ் செய்வது இயைபெனப்படும் என்றவாறு. இயைபென்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச்சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் 1கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச்செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டு இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தனபோலும். 2பரந்தமொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோலோடு இதனிடை வேற்றுமையென்னையெனின்,--அவை உயிரீற்றவாதல் பெரும் பான்மையாகலான் 3வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலுமுடைய வென்பது. சொற்றொடரென்பது, அந்தாதியெனப்படுவது; என்றதனான், உயிரீற்றுச் சொற்றொடர் சிறுபான்மையென்பது கொள்க. (240) [புலன் இதுவெனல்] 553. | 4சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. |
இது, புலனாமாறுணர்த்துதல் நுதலிற்று.
1. கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுள் என்றது உதயணன்காதையை. இது பெருங்கதை எனவும் கொங்குவேண் மாக்கதை எனவும் படும். கொங்கவேளாராற் செய்யப்பட்ட எனவும் பாடம். இதுவும் பொருந்துமே லாராய்ந்து கொள்க. 2. இயைபாகிய இதுவும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகலானே உரையாசிரியர் இரண்டற்கும் வேறுபாடு கூறினார் என்க. 3. இதனிடைச் சில சொற்றவறியிருத்தல் வேண்டும். 4. தெரிந்த மொழியான் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். |