‘மாற்றருஞ் சிறப்பின்’ என்றதனானே 1இவை ஒருதலையாகத் தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படுமென்பதூஉம், 2ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடுபட்ட மரபு பிறழவும் செய்யுளின்பம்படின் அவ்வாறு செய்பவென்பதூஉங் கூறியவாறாயிற்று. “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி.” (பெரும்பாண். 1--2) எனவும், “நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றென்னை கூறினள் புன்னையது சிறப்பே.” (நற். 172) எனவும் வரும். அவற்றுள் பரிதியஞ் செல்வனைப் 3‘பருகும்’, ‘காலும்’ என்றலும், புன்னைமரத்தினை ‘நுவ்வை’ யென்றலும் மரபன்மையின் வழக்கினுண் மாற்றுதற்கு உரியவாமென்பது கருத்து. “நிலவுக்குவித் தன்ன வெண்மணல்.” (குறுந். 123) எனவும், “இருடுணிந் தன்ன வேனங் காணின்.” (மலைபடு. 247) எனவும், “இருணூற் றன்ன விரும்பல் கூந்தல்.” எனவும் வருவனவும் அவை. (1) [மரபுபற்றி வரும் ஆண்பாற் பெயர் இவை எனல்] 557. | ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ் சேவுஞ் சேவலு மிரலையுங் கலையு மோத்தையுந் தகரு 5முதளு மப்பரும் போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிப. |
1. ஒருதலையாக--துணிபாக. 2. இவற்றிற் குதாரணம் பின்வருகின்றன. அவற்றால் விளங்குக. 3. பருகும், காலும், நுவ்வை என்பன ‘வழக்கொடுபட்ட மரபு பிறழவும். . . . அவ்வாறு செய்ப’ எனத் தாம் முன் கூறியதற்குக் காட்டிய உதாரணங்களென்க. பிறவுமன்ன. நுவ்வை--நுமது தங்கை. 4. நிலவைக் குவித்தலும் இருளைத் துணித்தலும் நூற்றலும் கூடாமையின் அவையும் வழக்கொடுபட்ட மரபன்றாயின. 5. உதள் எனப் பிரிக்க. |