பக்கம் எண் :

626மரபியல்

[பார்ப்பும் பிள்ளையும் தவழ்பவைக்கும் ஆம் எனல்]

560.தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன.

இ--ள் : பார்ப்பும் பிள்ளையும் தவழ்பவற்றிற்கும் உரிய என்றவாறு.

அவை, ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலாயின. ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தியங்குங்கால் தவழ்பவையெனப்படும்; உதாரணம்,

“யாமைப் பார்ப்பி னன்ன
 காமங் காதலர் கையற விடினே.”

(குறுந். 152)

எனவும்,

“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை.”

(ஐங்குறு. 41)

எனவும்,

“தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
 பிள்ளை தின்னு முதலைத் தவனூர்.”

(ஐங்குறு. 24)

எனவும் வரும்.

‘தாமும் என்றதனான், ஊர்வனவு நடப்பனவுஞ் சிறுபான்மை பிள்ளைப் பெயர்க்கு உரியவெனக் கொள்க. அது ‘பிள்ளைப்பாம்பு’ என ஊர்வனமேல் வந்தது.

“பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி.”

(குறுந். 107)

என நடப்பனமேல் வந்தது. ‘மூங்காப்பிள்ளை’ என்பதும் ஈண்டே கொள்ளப்படும். பார்ப்பும் அவ்வாறே வருவன உளவேற் கொள்க. இதுவுந் தவழுஞ் சாதிக்கெல்லாம் பொதுவாகிய பரப்புடைமையின் இரண்டாவது வைத்தானென்பது.

(5)

[குட்டி என்னும் பெயர்க்குரியன இவை எனல்]

561.1மூங்கா 2வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய.

இது, மேல் எடுத்தோத்தானும் இலேசானும் அதிகாரப்பட்ட தவழ்வனவும் நடப்பனவும்பற்றிக் குட்டியென்னும் பெயரினையு முறையன்றிக் கூறுகின்றது.


1. மூங்கா--கீரியு ளொரு சாதி.

2. வெருகு--பூனையுளொருசாதி. காட்டுப்பூனை என்பாருமுளர்.