இ--ள் : குட்டியெனப்படுவன இவை நான்கும் என்றவாறு. அவை, மூங்காக்குட்டி வெருக்குக்குட்டி எலிக்குட்டி அணிற்குட்டி என வரும். ‘மூவரியணில்’ என்றதனால், ஒழிந்த மூன்றுந் தம்முள் ஒருபிறப்பினவாம்; 1இவை ஒருநிகரனவே என்பது கொள்க. ‘ஆங்கவை நான்கும்’ என்றதனால், தத்துவனவற்றுக்குங் குட்டிப்பெயர் கொடுக்கப்படும்; ‘தவளைக்குட்டி’ என வரும். மேல் ஊர்வனவற்றுக்கும் தவழ்வனவற்றிலக்கணம் எய்துவித்தமையாற் பாம்புக்குட்டியென்பதுங் கொள்க. மற்றுக் கீரியும்நாவியும் போல்பவற்றையும் குட்டியென்னாரோவெனின்,--அவை பிள்ளையென்றலே பெரும்பான்மையாகலின் ‘உரிய’ என்றதனால், சிறுபான்மை குட்டியென்பதுங் கொள்க. மூங்காவின் விகற்பமென்பாருமுளர். (6) [பறழும் மூங்கா முதலிய நான்கற்கும் உரியவெனல்] 562. | பறழெனப் படினு முறழாண் டில்லை. |
இ--ள் : மேற்கூறிய நான்கும் பறழெனவும்படும் என்றவாறு. இவை இக்காலத்து வீழ்ந்தன. மற்று முற்கூறிய நான்கினையும் 2இப்பெயரானே முற்கூறுக, 3முதற் சூத்திரத்துள் ஓதிய முறைமைக்கேற்பவெனின்,--அற்றன்று; அவற்றுக்கு இப்பெயர் சிறுபான்மையென்பான் பிற் கூறினானென்பது. ‘உறழாண்டில்லை’ என்ற மிகையானே, “கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி.” (குறுந். 69) என்பதுங் கொள்க. (7)
1. இவை இது என்றிருத்தல் வேண்டும்; அணிலைச் சுட்டுதலின். ஆணும் பெண்ணுமாகிய பன்மைபற்றி ஆசிரியர் இவை என்றார் என்று வேறிடத்துப் பேராசிரியர் கூறுவர். ஆதலின் தாமும் இங்கு அவ்வாறு கூறினாரெனினுமாம். 2. இப்பெயர்--பறழ் என்ற பெயர். 3. 556-ம் சூத்திரம். (மரபியல்-1.) |