[மேற்கூறிய ஐந்தற்கும் குட்டியும் பறழும் உரிய எனல்] | 565. | குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். |
இ--ள் : மேற்கூறிய ஐந்தினையும் குட்டியென்றும் பறழென்றுங் கூறுதல்வரையார் என்றவாறு. அவை, நாய்க்குட்டி பன்றிக்குட்டி புலிக்குட்டி முயற்குட்டி என வழக்கினுள் வந்தன. “பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய்.” (அகம். 336) எனவும், “வயநா யெறிந்து வன்பறழ் தழீஇ . . . . . . . . . . . . . . . . . . . . . . . தறுகட் பன்றி.” (அகம். 248) எனவும், “புலிப்பற ழன்ன பூஞ்சினை வேங்கை.” எனவும், “பதவுமேயல் பற்றி முயற்பற ழோம்புஞ் சீறூ ரோளே நன்னுதல்.” எனவும், “நரிப்பறழ் கவர நாய்முதல் சுரக்கும்.” எனவும் முறையானே வந்தன. நாயெனச் செந்நாய் நீர்நாய் முதலாயினவும் அடங்குமென்பது. ‘மூவரியணில்’ என்றவழிச் சொல்லப்பட்டவாறும் உய்த்துணர்க. பிறவும் அன்ன. (10) [மேற்கூறிய ஐந்தனுள் நாயொழித் தேனைய பிள்ளைப் பெயர்க்குமுரிய எனல்] | 566. | பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. |
இ--ள் : மேற்கூறிய ஐந்து சாதியுள்ளும் நாயொழித்து ஒழிந்த நான்கற்கும் பிள்ளையென்னும் பெயர்க்கொடையும் உரித்து என்றவாறு. இவை செய்யுட்கண் வருவன கண்டுகொள்க. ‘கொள்ளுங் காலை’ என்றதனான், முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி1நரிப்பிள்ளையென்பதே கோடலும் ஒன்று. (11)
1. இக்காலத்தும் வழக்கிலுள்ளது. |