[மறி என்னும் பெயர் இவைக்குரியது எனல்] | 567. | யாடுங் குதிரையு நவ்வியு முழையு மோடும் புல்வா யுளப்பட மறியே. |
இ--ள் : இவ்வைந்து சாதியின் இளமைப்பெயர் மறியெனப்படும் என்றவாறு. அவை, “மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற விடையன்.” (அகம். 94) எனவும், “உள்ளில வயிற்ற வெள்ளை வெண்மறி.” (அகம். 104) எனவும் யாட்டின்மேல் வந்தன. மறிக்குதிரையெனவும் மறிநூக்கிற்றெனவுஞ் சொல்லுதலின் இது குதிரைக்கும் உரித்தாயிற்று. “நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும்.” (குறுந். 282) எனவும், “மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித் தெள்ளறல் தழீஇய.” (அகம். 34) எனவும், “தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி.” (குறு. 213) எனவும் இவை, நவ்வியும் உழையும் புல்வாயும் முறையானே மறியென்னும் பெயர் எய்தியவாறு அவ்வச் செய்யுளுட் கண்டுகொள்க. நவ்வியும் உழையும் புல்வாயுள் அடங்குமன்றே, அவற்றை மூன்றாக ஓதியதென்னை? நாயென்றதுபோல அடங்காதோவெனின்,--1மாவென்பது, குதிரையும் யானையும் புலியுஞ் சிங்கமும் முதலாயவற்றுக்கெல்லாம் பெயராகலின் அவ்வாறு ஓதானென்பது. ‘ஓடும் புல்வாய்’ என்றதனானே, 2மடனுடையன நவ்வியெனவும், இடைநிகரன உழையெனவுங் கொள்க. எட்டாம் முறைமைக்கண் ஓதிய மறியினை ஐந்தாம்வழிக் கூறியவதனானே, “செவ்வரைச் சேக்கை 3வருடை மான்மறி.” (குறு. 187) என்றதுபோல்வன கொள்க.
1. மா என்பது விலங்கு என்னும் பொருளவாகலின் அப்பொதுமைபற்றி அதனுள் வேறுபாட்டுச் சிறப்புடைய குதிரை முதலியனவற்றை அடக்குதல் முடியாதவாறுபோல, புல்வாயென்ற பொதுப்பெயருள் வேறுபாடுடைய நவ்வி முதலிய சிறப்புப் பெயர்களை அடக்குதல் முடியாதென்றபடி. புல்வாய் சிறப்புப் பெயராயும் வருமென்பதுபற்றி அதனையுஞ் சேர்த்துக் கூறினார் போலும். 2. மடம்--மடப்பம். மடனடையன என்று மிருந்திருக்கலாம் போலும். 3. வருடை--மலையாடு. |