பக்கம் எண் :

642மரபியல்

இ--ள் : நந்தும் முரளும் ஈரறிவாகிய ஊற்றுணர்வும் நாவுணர்வுமுடையன; பிறவும் அக்கிளைப்பிறப்பு உள என்றவாறு.

இரைசுவைகோடலும், பிறிதொன்று தாக்கியவழி அறிதலுமுடைமையின் மெய்யுணர்வோடு நாவுணர்வுமுடையனவென்றவாறு. இவற்றுக்குக் கிளையென்பன கிளிஞ்சிலும் 1முற்றிலும் முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவுமெனக் கொள்க. பிறப்பென்பன முற்கூறியவாறே கொள்ளப்படும்.

(29)

[மூவறியுடையன இவை எனல்]

585.சிதலு மெறும்பு மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

இது, மூவறிவின கூறுகின்றது.

இ--ள் : சிதலும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வு முடைய; அவற்றுக் கிளையும் பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய என்றவாறு.

இவை 2உற்றுணர்ந்து மீடலும், நாச்சுவை கோடலும், நெய்யுள்வழி மோந்தறிதலுமென மூன்றறிவினையுடையவாறு கண்டுகொள்க. இவற்றுக்குக் கண்ணுஞ் செவியுமின்மை எற்றாலறிதுமெனின்,--ஒன்று தாக்கியவழியன்றி அறியாமையிற் கண்ணிலவென்பது அறிதும்; உரப்பியவழி ஓடாமையிற் செவியிலவென்பது அறிதும். இவற்றின் கிளையென்பன 3‘ஈயன் மூதாய்’ (அகம். 14) போல்வன. பிறப்பென்பன, முற்கூறியவாறே மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் இம்மூன்றுணர்வாகிய பருவத்தனவும் அட்டை முதலாகியவுமெல்லாங் கொள்க.

(30)

[நான்கறிவுடையன இவை எனல்]

586.4நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

1. முற்றில்--மட்டி; சிப்பிவகையுளொன்று என்பர்.

2. உற்றுணர்தல்--பரிசித்தறிதல்.

3. ஈயன்மூதாய்--இந்திரகோபம். தம்பலப்பூச்சி என்பது இக்கால வழக்கு.

4. வண்டுந் தும்பியும் என்று பாடமிருந்திருக்கலாம் போலும். நன்னூலார் அவ்வாறு கொள்வர். நச்சினார்க்கினியரும் அவ்வாறு கொண்டனரென்பது பெரும்பாண்.--183-ம் அடியுரையா லறியலாம்.