பக்கம் எண் :

பொருளதிகாரம்643

நண்டுந் தும்பியும் நான்கறிவினவெனவும், அந்நாலறிவினையுடைய கிளையும் பிறப்பும் வேறுளவென்பதூஉங் கூறியவாறு.

இ--ள் : நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்1வொழித்து ஒழிந்த நான்கு உணர்வும் உள; அவற்றுக் கிளையும் பிறப்பும் பிறவும் உள என்றவாறு.

மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நாவுணர்வும், நாற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையிற் கண்ணுணர்வு முடையவாயின. நண்டிற்கு மூக்குண்டோவெனின்,--அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம். இவற்றுக்குக் கிளையென்பன:--வண்டுந் தேனீயுங் குளவியும் முதலாயின. பிறப்பென்பன:--நான்கறிவுடைய பிற சாதிகளென முற்கூறியவாறே கொள்க.

(31)

[ஐயறிவுடையன இவை எனல்]

587. மாவு 2மாக்களு மையறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

இஃது, ஐயறிவுடையன கூறுகின்றது.

இ--ள் : ஐயறிவுடையன விலங்கும் அவைபோல்வன ஒரு சார் மானிடங்களுமாம்; அக்கிளைப்பிறப்புப் பிறவும் உள என்றவாறு.

மாவென்பன--நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார்--மனவுணர்ச்சி யில்லாதார். கிளையென்பன--3எண்கால் வருடையும் குரங்கும்போல்வன. எண்காலவாயினும் 4மாவெனப்படுதலின் வருடை கிளையாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளையாயிற்று. பிறப்பென்பன--கிளியும் பாம்பும் முதலாயின.


1. ஒழித்து என்பதே சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம். அது பொருத்தமாதல் காண்க. ஒத்து என்பது ஏனைய பதிப்புக்களிற் பாடம். அது பொருத்தமில்லை.

2. புள்ளும் எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அது சிறப்பாதல் காண்க.

3. எண்கால் வருடை--செங்குத்தான மலையில் வசிக்கும் ஒரு விலங்கு. குறுந்.187-ம் செய்யுளுரையும், மலைபடுகடாம். 502--3-ம் அடியுரையும். ஐங்குறு. 287-ம் செய்யுளும் பார்க்குக.

4. மாவெனப்படுதலின்--விலங்கு எனப்படுதலின்.