பக்கம் எண் :

78மெய்ப்பாட்டியல்

தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங்
கானக நாடன் மகன்.”

(கலி-39)

என்பது 1பிறப்பொப்புமை.

“உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய
 வினைமுடித் தன்ன வினியோண்
2மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.”

(நற்-3)

என்பது, தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையிற் குடிமையாயிற்று.

“கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
 கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு
 மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து,”

(அகம்-93)

என்புழி, இன்ன காரணத்திற் பிரிந்துபோந்து வினைமுடித்தனமாயினும் அவளை ‘முயங்குகஞ் சென்மோ’ என்றமையின் தன் ஆள்வினைக்குத்தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாளென்பதூஉம் கருதிய கருத்தினாற் காமக்குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று.

“என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்
 மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்,”

(கலி-18)

என்பது, 3யாண்டு.

“முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணு
4நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய
 சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பாரியார்.”

(கலி. 108)

என்பது, உருவு.


1. இருவரும் வேடசாதியிற் பிறந்தமைபற்றிப் பிறப் பொப்புமை என்றார். நச்சினார்க்கினியர் இதனைக் குலத்திற் சிறிதுயர்ந்தானாயினும் ஒப்பாமென்றது கானகநாடன் என வந்தமையிற்போலும். கலி - 39 உரை நோக்குக.

2. மனைமாண் சுடரொடு என்றமையான் இல்லற நிகழ்ச்சி பெறப்பட்டது.

3. யாண்டு--பருவம். என்தோள் எழுதிய என்றதனானும், மைந்துடை மார்பு என்றதனானும் பருவம் பெறப்படும். எழுதற்குக்காரணம் தோளிற்கொண்ட விருப்பமாதலின் பருவம் பெறப்படும். மைந்துடைமார்பு என்றதனால் தலைவ னிளமை பெறப்படும்.

4. நல்லேன் என்று தருக்கிய என்றதனால் உருவாலாகிய மெய்ப்பாடு பெறப்படும். மார்பிற் சுணங்கு - மார்பின் முயக்கத்தாலாகிய (இவள் முலையிற்) சுணங்கி னழகையும். ‘நின் மார்பு’ என்னும் பிரயோகம் அடையடுத்தும்  அடாதும் வருவனவும், நுந்தை மார்பு என்பது போல்வனவும் ஆறாம் வேற்றுமைப் பொருளிலேயே கலியில்வருதலின் ஈண்டும் ஆறாவதே பொருத்தமும் நேர் பொருளமாதல் காண்க. க. நச்சினார்கினியரும் ஆறாவதற்கு, தொல். எச்ச. 17-ம் சூத்திர உரையில் உதாரணமாக இதனையே காட்டுகின்றனர். கலியில் வேறு கூறுவர். அதனை உதாரணச் செய்யளுரையிற் காண்க.