பக்கம் எண் :

80மெய்ப்பாட்டியல்

1”தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப.”

(அகம்-22)

என்பது, இருவருணர்வும் ஒத்தவாறு; தலைமகள் குறிப்பு உணர்ந்து வந்தனனென்றமையின். இது, ‘செல்வம் புலன்’ (259) என்புழிப் 2புலனெனப்படாது காமத்திற்கே உரித்தாகிய உணர்வாகி வேறு கூறப்பட்டது.

“நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட்
 பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற்
 றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற்
 சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல
 பலவல்லன் றோளாள் பவன்.”

(கலி-143)

என்பது, திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு; என்னை? இனையனவல்லனாதல் செல்வக்குடிப் பிறந்தாரை அறிவிக்குமாகலின் அது காமக்குறிப்பினை நிகழ்த்துமென்பது. இது தலைமகட்கும் ஒக்கும்.

3”உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி
 னிழிந்ததோ கூனின் பிறப்பு.”

(கலி-64)

என்பதும் 4பிறப்புவகையின்பாற்படும். பிறவும் இவ்வாறே கொள்க.

(25)

[*தலைமகன்கண் நிகழாத மெய்ப்பாடுகள்]

274. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
யின்புற லேழைமை மறப்போ டொப்புமை
யென்றிவை யின்மை யென்மனார் புலவர்.

இது காமக்குறிப்பாகாதன கூறுகின்றது.


1. இது தலைவி கூற்று. தனது வேட்கையையுடைய உள்ளத்தில் நமது வேட்கையும் வாய்ப்ப, என்றதனால் இருவர் வேட்கையு மொத்தவாறு காண்க. இது பேராசிரியர் கருத்து. அகநானூற்றுக் குறிப்புரைகாரர் வேறுபொருள் கூறுவர்.

2. புலன் என்பது கல்விபற்றிய அறிவாதலின் அது வேறு என்றபடி.

3. உழுந்து--உழுத்தம் பணியாரம். துவ்வா--அநுபவிக்கப்பட்டு இருக்கிற. இருக்கிற என்பது சொல்லெச்சத்தான் வருவிக்கப்பட்டது. கலி--உரை நோக்குக.

4. கூனுங் குறளுமாதலின் பிறப்புவகையுளடங்கின.

* இளம்பூரணர் இவை தலைமகன்மாட்டு நிகழாத மெய்ப்பாடுகள் என்பர். இருவர்கண்ணு நிகழாதன என்று கூறுவாருமுளர். எது பொருத்தமென்பது சங்க இலக்கியநோக்கி ஆராய்ந்து கொள்ளத்தக்கது.