என்புழி, நகைக்கேதுவாகிய பொருள் கூறியதல்லது அப்பொருள்பற்றிப் பிறந்த நகையுணர்வு புலப்படுமாறு இன்னவாறென்றிலன். இனி, ‘உடைமை யின்புறல்’ (260) என்றற்றொடக்கத்தனவினும் அவ்வாறு எண்ணியதல்லது அவை உணரு மாற்றுக்குக் கருவி கூறியதிலன். அங்ஙனமே பிறவுங் கூறியதிலனாகலான் அதனை ஒருவாற்றாற் கூறுகின்றான். இ--ள் : கண்ணானுஞ் செவியானும் யாப்புற அறியும் அறிவுடையார்க்கல்லது (251) மெய்ப்பாட்டுப் பொருள்கோடல் ஆராய்தற்கு அருமையுடைத்து என்றவாறு. மற்று மனத்து நிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானுஞ் செவியானு முணர்தலென்பதென்னையெனின்,--மெய்ப்பாடுபிறந்த வழி உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும், உரை வேறுபடுதலுமுடைமையின் அவை கண்ணானுஞ் செவியானு முணர்ந்து கோடல் அவ்வத்துறை போயினாரது ஆற்றலென்பது கருத்து. 1”இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே.” (குறுந். 312) என்பதனுள், அமராமுகத்தளாகுதலும் தமரோரன்னளாகுதலும் தலைமகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர்வெனப்படும். “ஒழிகோ யானென வழிதகக் கூறி.” (அகம். 110) என்புழி, தலைமகன்மனத்து நிகழ்ந்தவழிவெல்லாம் ஒழிகோயானென்ற உரையானே உணர்ந்தமையின் அது செவியுணர்வெனப்படும். இங்ஙனம் உணர்தலும் உணர்வுடையார்க்கன்றிப் பெரிதும் அரிதென்பான் ‘எண்ணருங்குரைத்து’ என்றானென்பது. (27) மெய்ப்பாட்டியல் முற்றிற்று.
1. இரண்டறிகள்வி என்னும் பாடத்திற்கு இருவேறொழு கலாற்றை அறிந்த கள்ளத்தன்மையுடையாள் என்பது பொருள் இரண்டறிகளவின் என்னும் பாடத்திற்கு இரண்டாந்தன்மையள்; அறியப்படுங் களவின்கண் என்பது பொருள். இரண்டாந்தன்மை--நம்மோரன்னளாதலும், தமரோரன்னளாதலும். |