8. பாணன் மயக்கம் பொருந்திய மனத்தையுடையோனாய்த் தொழுது நின்றது எனக்குச் சிரிப்பாகின்றது. இது தலைவி கூற்று. பிறன்பேதைமை - பாணனாகிய பிறனது பேதைமை. (அகம். 56) 9. யாம் உம்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள். இது தலைவி கூறியது. 10. நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்லது ஒரு கண்ணை சிறங்கணித்தாள்போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழாநிற்கும். சிறங்கணித்தல் - சுருக்கி நோக்கல்; போல என்றதனால் வெளிப்படாமல் நோக்கினாள் என்பது பெறப்படும். இது பரிமேலழகர் கருத்து. (குறள். 1095) 11. பெருமை பொருந்திய மெல்லிய தோளையுடையாள் (தலைவி) நம்மொடு தாம் வருமென்ப. அது குறித்து நாம் நகையுடையேம். நாணகையுடையேம் என்னும் பாடத்திற்கு நாளும் நகையுடையம் என்க. (அகம். 121) (தலைவியின் மடத்தை நினைத்துச் சிரித்தமையின் பிறர்மடமென்றார். தொல்-உரை.) 12. சிறிது உள்ளத்தெழுந்த வாயிற்பொருந்திய சிரிப்பையுடையவள். (உண்மையல்லாத சிரிப்பாதலின் உள்ளத்தோடு பிறவாத நகையென்றார்) (அகம்.5) 253-ம் சூத்திரம் 1. சந்தனக்குழம்பாலெழுதிய தொய்யிற்கோலஞ் சிதைய அழுதனளாய் ஏங்கி அழுத்திவிட்டதுபோல உருவுகொண்டதே மலையும் பலமுறை நொடித்தலாற் சிவந்த மெல்லிய விரலையும் பலமுறை திருகுதலாற் கூரிய நுதி மழுங்கிய எயிற்றையுமுடைய ளாய்ஊர்முற்றும்நின்னியல்பைச் சொல்லிவருவாள். (அகம். 176) அத்தகைய அவள் நின்னைக் காணும்படி செல்வாய். இது தோழி சொல்லியது. தன் என்றது பரத்தையை. (தொல்-வரை) 2. கயம் - குளம். உண்கண் - மையுண்ட கண். உரைக்கல்லான் - உரையான். பெயரும் - வந்துசெல்லும். அவனுக்கு உறவில்லாதவளாகிய யானும் வருத்தத்திலே வீழ்ந்து அழுந்துவேன். (கலி. 37) இளிவரல்-எளிமை. அவலம்-அழுகை. (தொல்--உரை) இவ்வவலம் கருணைபற்றி வந்தது; என்னை? தலைவன் இளிவந்தொழுகல்பற்றிப் பாங்கி இரங்கினமையின். 3. கண்ணினின்றுஞ் சொரிகின்ற நீரே நீராகக்கொண்டு சாணகத்தான் மெழுகுவாள். (புறம். 249) இழவு - கணவனை இழத்தல் (தொல்--உரை) |