259-ம் சூத்திரம் 1. நீதான் வலியுடைத்தாகிய மனத்தையுடையை. தேடும் பொருளைத் தேடிமுடித்த செல்வத்தான் உண்டாகும் பொருடான் இவ்வின்பமென்று கூறுகின்றவனே! (கலி. 12) 2. நல்ல கலங்களைப்பெற்ற மகிழ்ச்சியை யுடையார். கலம்--ஆபரணம். என்பது வண்மையானாகும் மகிழ்ச்சி. 3. பெண்டிரது நலத்தை நுகர்ந்து தண்ணியமலைச்சாரலிடத்துத் தாதையுண்ணும் வண்டு அப்பூவைத் துறக்குமாறு போல அவளைத் துறக்கின்றவனுடைய மலை. முகைப்பதம்--அலரும் பருவம். நகைப்பதம்--தன்னொடு நகையாடி இன்பம் நுகர்தற்கேற்ற பருவம். (கலி. 40) 4. தம்முட் பகையில்லாரும் கூரிய அறிவுடையாருமாகிய கல்விப்பெரியார் தம்முட்கூடி மகிழ்தலினும் இன்பமுடைத்தாயின் தேவருலகை யாம் பார்ப்போம். (நாலடி. 14-7) 5. வடித்த நரம்பையுடைய யாழைப்போல இனிய மொழிகளைக்கூறி வளையினது மூட்டுவாயின் வடுப்பொருந்த எம்மைக் கூடினாள். (அகம். 142) 6. யாம் துயிலின்றி யாமக்கடலை நீந்தத் தான் மயில்போலும் இயலினையுடைய பரத்தையர் மருவுதலை நுகர்ந்து அவருடனே யழகிய புனலையுடைய மடுக்களையாடி நம்மை மறந்து அவரிடத்தே யமைந்திருப்பன். (நச்சினார்க்கினியரால் புனல் தொழுவை என மாற்றிப் பொருள்கொள்ளப்பட்டது. மடுவிலுள்ள நீரிலாடி என்று நேரேயும் பொருள்கொள்ளலாம்.) (கலி. 30) 261-ம் சூத்திரம் 1. யான் தன்னை நோக்குங்கால் (நாணி) நிலத்தை நோக்குவாள்; யானோக்காக்கால் தான் என்னை நோக்கி மெல்ல நகுவாள். (குற. 1094) 2. பெரிய புழுக்கத்தையடைந்த பிறைபோலும் நெற்றியின்கண் எழுந்த புள்ளியமைந்த வியர்வையைச் சிறிய காற்று ஆற்றச் சிறிதுபொழுது திறப்பாய் என்று தலைவன் கூற. (அகம். 136) 3. முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம்போல நின்பேதை என்னொடு நக்க நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்புண்டு. (குறள். 1274) |