268-ம் சூத்திரம் 1. காவலரறியாமற் தன்னைவிரும்பும் உள்ளத்தே எம்மேலுள்ள வேட்கை வாய்ப்ப இனிய உயிருங்குழைய முயங்குந் தோறும் உடம்பு பொலிந்து இளைத்த நோய்தணி காதலர் ஈண்டு வர வேலன்பொருட்டு எந்நோய் தணித்தமையை அறிந்து யான் நக்கேனல்லனோ? தோழீ! முயங்குதொறும் நக்கனனல்லனோ என்க. (அகம். 22) தமது வேட்கைபொருந்திய உள்ளத்தே எமது வேட்கையும் வாய்ப்ப என்று பொருள்கொள்வர் பேராசிரியர். 2. புனைந்து வருதலையுடைய இளமுலை அழுந்தவும் பலமுறை தொடி விளங்கும் முன்கை வளைந்து புறஞ்சுற்றவும் நின்மார்பைக் கூடுதலின் இன்பமாகின்றது. (அகம். 58) 3. தண்ணிய மழைத்துளிக்கேற்ற பலதரம் உழுது சிவந்த வயலின் மண்போல நெஞ்சு நெகிழ்ந்து அவனைக் கலுழ்ந்து நெஞ்சு கீழற்றுப்போன அறிவுடையேற்கு. (அகம். 26) 4. வளை நெகிழ்ந்தன. தோள் மெலிந்தன. (குறுந். 239) 270-ம் சூத்திரம் 1. ஊதிப் பழகாத கோவலர்கள் (சிறுவர்) ஊதுகின்ற வலிய வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால். (அகம். 74) கல்லா--என்னை வருத்துமென்றறியாத எனினுமாம். 2. இரவில் மனையைச்சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலாகிய ஒன்றுபிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாதுசெய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாள். (அகம். 50) 3. நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ. (அகம். 170) 4. எந்தலைவர் தேர் வாராதாயினும் வந்ததுபோலக் காதினிடத்து ஒலிக்கும் ஒலியானே தோழி எங் கண் துயிலை மறந்தன. (குறுந். 302) 5. தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள். (அகம். 150) |