24. பெருமா! நுகத்துப் பகலாணிபோல் ஒரு பக்கத்தைக் கொள்ளுதலின்றி முறைமை செய்தற்குச் சாயாத கோல் செவ்விதாக நிகழ்த்துதலின் அவனை ஒப்பாய், மற்றுள்ள குணங்களில் அவனையொவ்வாதே கொள். (கலி. 86) 25. காவலன் யானைக்கெறிந்த கவண்கல் பலவின் பழத்துட்டங்கும் சிறிய மலைகள் பொருந்திய பெரிய மலையினையுடையவனைப் பாடுகம் வா! (கலி. 41) 26. வெயிலே என்றோளை மெலிவித்தானது வடிவழகின் தன்மையை யான் விரும்பிக் காண்பதல்லது அவன் செய்த நன்று தீதென்று சொல்லுகின்ற பிறவற்றைக் காணேன். (கலி. 141) 27. யான் அவனைப் பிடித்துக்கொண்டு காண்பேனாகப் பையென விழிப்ப யான் பிடித்த கையுள்ளே மறைந்து தோன்றானாயினான். (கலி. 142) 28. கடற்றெய்வமே என்னைப் பாதுகாவானாய்த் துறந்தவனை யான் தேடிக் காணுமிடத்தை நீ விட்டுப்போகாமல் ஏறுவாயாயின், நின்னிடமெல்லாம் வெறு மணலாகும்படி என்காற்புறத்தாலே நின்னுடைய நீரெல்லாம் போம்படி இறைப்பேன். அது முடியுமோ என்னின், அங்ஙனம் முயலின் அதற்கு அறக்கடவுள் உதவியாதலு முண்டாயிருக்கும் என்றுங் கூறினாள். (கலி. 144) 29. ஆடவர், தமக்குக் காமங்காழ்க் கொள்ளிற் குதிரையாகப் பனைமடலையும் ஊர்ப; பூவாகத் திரண்ட சுரும்பையுடைய எருக்கம் பூமாலையையுஞ் சூடுப; மடலூர்ந்து வீதியிலே செல்லும்போது பிறர் தம்மைக்கண்டு ஆரவாரிக்கவும்படுவர். தங்கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தன் முதலிய வேறு செயலையும் உடையராவர். (குறு. 17) 30. நெஞ்சே! எவ்வியென்னும் வள்ளலையிழந்த வறுமையையுடைய யாழ்ப்பாணரது பொற்றாமரைப் பூவில்லாத வறிய தலையைப்போலப் பொலிவிழந்து வருந்துவாய். மனைப்படப் பையிலுள்ள மரத்தே படர்ந்த ஒளிபொருந்திய முல்லை மலர் நாறுகின்ற பலவாகிய கரிய கூந்தலையுடையாள் நமக்கு எத்தகைய உறவினையுடையளாவளோ (அயலாள்போலும்). (குறு. 19) 31. அழகிய இனிய சொல்லையும் அழகிய இழையையுமுடைய மடந்தையின் வளைந்த குழையோடு மாறுபடுகின்ற நோக்கம் நெடிய தூரிய அரிய (காட்டு) வழியில் (நின்னைத்) தடுக்கும்பொழுது (அகம் 3) |