பக்கம் எண் :

பொருளதிகாரம்97

271-ம் சூத்திரம்

1. நொச்சி வேலியாகச் சூழ்ந்துநிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி. நொச்சிவேலிப் புறங்காடு என்க. புறங்காடு ஊரின் புறத்தேயுள்ள காடு.

(அகம். 122)

2. இனிய உயிர் நீங்குவதாயினும் நின்மகளது அழகிய குவளை மலர்போலும் மையுண்ட கண்ணின் பசளை காமநோயால் உண்டானதென்று சொல்லாதீம்.

(அகம். 52)

தலைவி கூற்று. இன்னுயிர் கழிவதாயினும் என்பது வாழ்க்கை முனிந்தது.

3. யாம் இத்தன்மையமாகவும் எமது நல்ல நெஞ்சமானது என்னொடும் நின்னொடும் ஆலோசியாது கைகடந்து சிறு மலைகள் பொருந்தி இருண்ட வழி நுணுகிய வருதற்கரிய மலையின் கண் மழையையுடைய மேகம் நீர்வடிந்து (நிறையப்பெற்ற) நுணுகிய அரிய கண்ணையுடைய யானைப்படுகுழியை வழியில் இரவின்கண் மிதிப்புழி (அக்குழியின் மிதித்தலை நோக்கி) மிதியாமல் அவர் தளிரடியைத் தாங்கும்படி இன்று சென்றது.

(அகம். 128)

4. நல்லவரை நாடனே! நீ இரவில் வரின் மெல்லியறான் உயிர் வாழாள். ஓரும் - அசைநிலை.

(அகம். 12)

5. கடற்கரைச் சோலையும் எமது தலைவரிடம் எமக்காகச் சென்று தூது கூறாது; தேன் மொய்த்த நறுமலர்களையுடைய புன்னையுஞ் சொல்லாது; அலவ! ஒருவனாகிய நின்னையல்லது தூது போக்குதற்கு வேறொன்றையுமிலேன். கரிய கழியின்கண் மலர்ந்த கண்போலும் நெய்தற்பூவின் கமழாநின்ற இதழ் நாற்றத்தை அமிழ்தாக விரும்பி அதன் தண்ணிய தாதை யூதிய வண்டுக் கூட்டங்கள் களிப்பாற் சிறந்து சிறகைக் கிளர்த்துகின்ற துறையை யுடையனாகிய நீயே (சென்று) அத்தூதைச் சொல்ல வேண்டும்.

(அகம். 170)

6. புல்லிய வீழையுடைய இற்றியினுடைய கல்லிற் படர்ந்த வெள்ளிய வேர் வரையினின்றும் கீழிழிகின்ற அருவிபோலத் தோன்றும் நாட்டையுடைய தலைவனது குற்றமற்ற நெஞ்சிற்றோன்றிய சொற்களை உரைக்குந் தூது நம்மாட்டு நயப்பைத் தந்தது. தோழியே! ஆதலால் நாமும் நெய்பெய் தீயைப்போலக் கிளர்ச்சியோடு அத்தூதை எதிர்கொண்டு அவன் மணந்தகாலத் தன்பையொத்த அன்பையுள்ளேம் என்று சொல்லித் தூதுவிடுவேம்.

(குறுந். 106)